கனடாவில் பிறந்த சிசுவை பாதணி பெட்டியில் கைவிட்டுச் சென்ற தாய் கைது
கனடாவில், கிறிஸ்மஸ் காலத்தில் டொராண்டோ நகரிலுள்ள செயின்ட் மோனிகா கத்தோலிக்க தேவாலயத்தில் பிறந்த பெண் குழந்தையை பாதணி பெட்டியில் விட்டுச் சென்றதாகக் கூறப்படும் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அந்தத் தாயின் அடையாள விவரங்களை டொராண்டோ பொலிஸார் வெளியிடவில்லை.
டிசம்பர் 21 ஆம் திகதி காலை 10.40 மணியளவில், யாங் ஸ்ட்ரீட்– பிராட்வே அவின்யூ பகுதியில் உள்ள செயின்ட் மோனிகா தேவாலயத்தில் பிறந்த சிசு கிடபப்தாக தகவல் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.

தேவாலயத்தின் உள்ளே உள்ள ஒரு ஷெல்ஃபில் வைக்கப்பட்டிருந்த பாதணி பெட்டியில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு இருந்த பக்தர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
பொலிஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
குழந்தை நல்ல உடல்நிலையில் இருப்பதாகவும், தாயும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளை ஆபத்தில் விட்டுச் செல்வது கனடாவில் கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது.