இங்கு செல்ல வேண்டாம் ; எச்சரிக்கும் உலக நாடுகள்
சவுதி அரேபியாவுக்கு செல்ல வேண்டாம் என தங்களுடைய குடிமக்களுக்கு 7 நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்க கூடிய அபாயம் உள்ள சூழலில், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தங்களுடைய குடிமக்களை சவுதி அரேபியாவுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்து இருந்தன.
இந்த பட்டியலில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளும் இணைந்துள்ளன. சவுதி அரேபியாவுக்கு எதிராக ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 2 நாட்களாக கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைநகர் ரியாத் நகரிலுள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். இதில், கடந்த சனிக்கிழமை நடந்த தாக்குதலின்போது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டனர்.
அவர்களில் அமெரிக்கா, எகிப்து, ஜோர்டான், சிரியா, பாலஸ்தீனம் மற்றும் சூடான் நாடுகளை சேர்ந்தவர்கள் அடங்குவர். இந்த தாக்குதலில், 309 பேர் வரை காயமடைந்தனர்.
அவர்களில் பலரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. அவர்களை மீட்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
இதனால், விமான நிலையத்திற்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இதனை சவுதி அரேபியாவின் விமான போக்குவரத்து கழகமும் உறுதிப்படுத்தி உள்ளது.
சவுதி அரேபியா மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பாலஸ்தீனம், எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.