ட்ரம்பின் புதிய அறிவித்தலால் உலகிற்கு காத்திருக்கும் சிக்கல் ; மீண்டும் மீண்டுமா?
பேச்சு பலன் தராவிட்டால், ஈரானுக்கு எதிராக 'புராஜெக்ட் ப்ரீடம்' திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்; அதுவும் 'பிளஸ்' என்ற பெயரில் இன்னும் அதிரடியாக இருக்கும்,'' என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் தொடுத்ததால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கிய வழித்தடமாக விளங்கி வரும், தன் வசம் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி வைத்துள்ளது.

இதனால், எண்ணெய் உள்ளிட்ட பல சரக்குகளை ஏற்றி வந்த கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி அருகே சிக்கித் தவிக்கின்றன. இதையடுத்து ட்ரம்ப், வெளிநாட்டு கப்பல்களை பத்திரமாக மீட்டு கொண்டு வரும் 'புராஜெக்ட் ப்ரீடம்' என்ற திட்டத்தை அறிவித்தார்.
ஆனால், அடுத்த நாளே, அமைதி பேச்சு நடத்த பாகிஸ்தான் மற்றும் சில நாடுகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கூறினார்.
இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 'புராஜெக்ட் ப்ரீடம்' திட்டத்தை டிரம்ப் மீண்டும் கையில் எடுத்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப் கூறியுள்ளதாவது: ஈரானுடன் சுமுகமான உடன்பாடு எட்டப்படவில்லை என்றால், நாங்கள் மீண்டும் பழைய பாதைக்கே திரும்புவோம்.
'புராஜெக்ட் ப்ரீடம்' திட்டம் நல்லதுதான், ஆனால் அதைவிடச் சிறந்த வழிகளும் எங்களிடம் உள்ளன. ஒருவேளை நாங்கள் அந்தத் திட்டத்தை மீண்டும் தொடங்கினால், அது, 'புராஜெக்ட் ப்ரீடம் பிளஸ்' ஆக இருக்கும். அதாவது, பழைய திட்டத்துடன் இன்னும் பல அதிரடி நடவடிக்கைகள் அதில் சேர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.