விளையாட்டை அரசியலாக்க வேண்டாம் ; ட்ரம்பின் யோசனையை நிராகரித்த இத்தாலி
உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில், ஈரானுக்குப் பதிலாக இத்தாலி பங்கேற்க வேண்டும் என்ற அமெரிக்காவின் ஆலோசனையை இத்தாலிய அரசாங்கம் கடுமையாகச் சாடியுள்ளது.
கடந்த பெப்ரவரி 28 அன்று ஈரான் மீதான போர் ஆரம்பமானதிலிருந்து, எதிர்வரும் கோடைக்காலத்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணத் தொடரில் ஈரான் பங்கேற்பது குறித்து பெரும் சந்தேகம் நிலவி வந்தது.

விளையாட்டை அரசியலாக்க வேண்டாம்
இநிலையில் ஈரானின் குழுநிலைப் போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவில் நடைபெறவிருந்த நிலையில், போர்ச் சூழல் காரணமாக ஈரானிய வீரர்கள் அங்கு விளையாடுவது கேள்விக்குறியானது.
இதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தூதுவர் ஒருவர், தகுதி பெறத் தவறிய இத்தாலிக்கு ஈரானின் இடத்தை வழங்கலாம் எனத் தெரிவித்திருந்தார். எனினும், இத்தாலிய அரசாங்க அதிகாரிகள் இதனை நிராகரித்துள்ளதுடன், விளையாட்டை அரசியலாக்க வேண்டாம் எனவும் இத்தாலி தெரிவித்துள்ளது.
தகுதிப் போட்டிகளின் அடிப்படையில் அல்லாமல், அரசியல் காரணங்களுக்காக உலகக்கிண்ணத்தில் நுழைவதை இத்தாலி விரும்பவில்லை என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மறுபுறம், ஈரானிய அரசாங்கப் பேச்சாளர் பாத்திமா மொஹஜெரானி இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உலகக்கிண்ணத் தொடரில் ஈரான் அணி வலுவாகப் பங்கேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாற்று இடங்களிலோ அல்லது திட்டமிட்டபடியோ ஈரான் களமிறங்கும் என்பதில் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உலகக் கிண்ணக் கால்பந்து தொடரை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.