எந்த நாடும் பாதுகாப்பாக இருக்காது ; ஈரானின் எச்சரிக்கையால் அதிரும் உலகம்
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான முன்மொழிவு தொடர்பாக அமெரிக்காவிடமிருந்து முறையான பதிலுக்காகக் ஈரான் காத்திருக்கிறது.
அதேநேரம், தனது நிலைப்பாட்டைத் தீவிரப்படுத்த மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் புதிய தாக்குதல்களை நடத்தவிருப்பதாக ஈரான் அச்சுறுத்தியுள்ளது. ஈரானின் முன்மொழிவை ட்ரம்ப் ஏற்கனவே நிராகரித்துவிட்டார்.

ஆனால், வரும் நாள்களில் அமெரிக்காவிடமிருந்து முறையான பதிலை எதிர்பார்ப்பதாக ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் நேற்று தெரிவித்தார்.
இரு நாடுகளிடையே சமீப நாள்களில் தாக்குதல்கள் நடைபெறவில்லை என்றாலும், ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களைக் குறிவைத்து வருகிறது.
அமெரிக்காவும் ராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலாக பொருளாதார அழுத்தப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், ஈரானின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படாவிட்டால், பிராந்தியத்தில் உள்ள எந்த நாடுகளின் உள்கட்டமைப்புகளும் பாதுகாப்பாக இருக்காது என்று ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃ அச்சுறுத்தியுள்ளார்.
அவர் பேசிய காணொலி ஒன்றில், “நாம் எண்ணெய் வர்த்தகம் செய்ய முடியாத பிராந்தியத்தில், வேறு யாரும் அதனை செய்யமுடியாது. நமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்காவிட்டால், எந்த நாடும் பாதுகாப்பாக இருக்காது” என்று எச்சரித்துள்ளார்.
மேலும், புதிய தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.
ஈரானின் சமீபத்திய சமீபத்திய முன்மொழிவை டிரம்ப் நிராகரித்த பின்னரும், அமெரிக்கா-ஈரான் இடையிலான ஒப்பந்தத்தை ஏற்படுத்த மத்தியஸ்த நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.