பல இலட்சம் பரிசு வென்ற உலகின் 'அசிங்கமான நாய்'
பெரும்பாலான நாடுகளில் நாய்களின் சிறப்பியல்பை எடுத்துக்காட்ட கண்காட்சிப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் வேடிக்கை நிறைந்த, அழகான நாய்கள் மக்களின் மனங்களை வசீகரிக்கும்.
இந்த முறை உலகின் அசிங்கமான நாய்க்கான போட்டிகள் நடைபெற்று அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரண்டு வயதான ஆங்கில-பிரெஞ்சு புல்டாக் கலவையான பெட்டூனியா என்ற நாய், "உலகின் அசிங்கமான நாய்" என்று முடிசூட்டப்பட்டுள்ளது.
பெட்டூனியா
அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தின் யூஜினைச் சேர்ந்த இந்த நாய்க்குட்டி, கடந்த வாரம் கலிபோர்னியா மாநிலத்தின் சாண்டா ரோசாவில் உள்ள சோனோமா கவுண்டி கண்காட்சியில் நடைபெற்ற போட்டியில் இந்திய மதிப்பில் ரூ.4.3 லட்சத்திற்கு மேல் பரிசை வென்றது.
8 வயதான சீனாவைச் சேர்ந்த க்ரெஸ்டட் நாய் மற்றும் 13 வயது சிவாவா நாய் உட்பட 10 போட்டியாளர்களை வீழ்த்தி பெட்டூனியா வெற்றியாளர் மகுடத்தைக் கைப்பற்றியுள்ளது.
உலகின் அசிங்கமான நாய்களுக்கான இந்தப் போட்டி, சுமார் 50 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு நடந்த போட்டியில், வைல்ட் தாங் என்ற பழைய பெக்கிங்கீஸ் இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்று வென்றது. ஏற்கனவே முந்தைய ஐந்து சீசன்களில் இது பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.