உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பட்டதைக் கைப்பற்றியது நியூசிலாந்து குலாம்!
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் நடந்து வருகிறது.
மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. 2-வது நாளில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை நியூசிலாந்து அணி தொடங்கியது. அந்த அணி, 249 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
அடுத்து 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சை ஆடியது. 5-வது நாள் முடிவில், இந்திய அணி 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் 32 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. மழை பாதிப்பு காரணமாக, மாற்று நாளாக அறிவிக்கப்பட்டிருந்த 6-வது நாளான இன்று, கடைசி நாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
இதனால் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில், 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி, நியூசிலாந்து அணியை விட 138- ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதனால், நியூசிலாந்து அணிக்கு 139-ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
தேநீர் இடைவேளை வரை, அந்த அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்தது.
அதன் பின் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 140 ரன்கள் விளாசி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அணியை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டதைக் கைப்பற்றியது.