தவறாக 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கனடியர் புற்று நோயில் மரணம்
தவறாக கொலைக்குற்றத்தில் தண்டிக்கப்பட்டு 18 ஆண்டுகள் சிறையில் இருந்த கனேடியர் ராபர்ட் மெயில்மேன் (Robert Mailman) 77 வயதில் மரணமடைந்துள்ளார்.
அவரின் பெயரை சட்டரீதியாக சுத்தப்படுத்தும் போராட்டத்தை வழிநடத்திய அப்பாவி கனடியர்கள் அமைப்பு, மெயில்மேன் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு செயின்ட் ஜான் (Saint John, N.B.) நகரில் மரணமடைந்ததாக இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
மெயில்மேன் மற்றும் அவரது நண்பர் வால்டர் கில்ஸ்பி (Walter Gillespie) ஆகியோர், 1983ஆம் ஆண்டு ஜார்ஜ் லீமன் (George Leeman) என்பவரை கொன்றதாக தவறாக குற்றம் சாட்டப்பட்டு, 1984ல் தண்டிக்கப்பட்டனர்.
ஆனால் 40 ஆண்டுகள் கழித்து, 2024 ஜனவரி 4ஆம் திகதி, நியூ ப்ரன்ஸ்விக் கிங் பெஞ்ச் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ட்ரேசி டிவேர் (Tracey DeWare) இருவருக்கும் விடுதலை வழங்கினார்.
அந்த நேரத்தில் நீதிபதி, “இருவரும் நீதி பிழை காரணமாக பாதிக்கப்பட்டவர்கள்” என்று கூறி அவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
மெயில்மேன் 2023 நவம்பரில் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவர் அவருக்கு சுமார் மூன்று மாதங்கள் மட்டுமே வாழ்நாள் இருப்பதாக அறிவித்திருந்தனர்.
அவரது நண்பர் வால்டர் கில்ஸ்பி 2024 ஏப்ரல் 20 அன்று உயிரிழந்தார். மெயில்மேன் தனது வாழ்க்கையின் கடைசி மாதங்களில் நீதி கிடைத்த மகிழ்ச்சியுடன் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.