ஒன்ராறியோவில் 2 அவது கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம்!
மார்ச் 10 தொடக்கம் 19ஆம் திகதிகளுக்கு இடையில், முதல்முறை அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்கள், இரண்டாவது தடுப்பூசிக்காக இந்த வாரம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ஒன்ராறியோ தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் டேவிட் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
ஏனையவர்கள் முதல் தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பின்னர், 12 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்றும் தடுப்பு மருந்து காலாவதியாக முன்னர், கூடிய விரைவில் இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளை, முதல்முறையாக தடுப்பு மருந்து பெற்றுக் கொள்பவர்களுக்கு வழங்குவதை ஒன்ராறியோ அரசாங்கம் 10 நாட்களுக்கு முன்னர் இடைநிறுத்தியுள்ளது.
தற்போது கையிருப்பில் உள்ள அஸ்ட்ரா ஜெனெகா மருந்துகள், ஏற்கனவே முதல் முறை தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது முறை போடுவதற்காகவே பயன்படுத்தப்படவுள்ளது.