உறவினர்களை சந்திக்க அமெரிக்கா புறப்பட்ட கனேடிய இளம்பெண்ணுக்கு காத்திருந்த ஏமாற்றம்
கனேடிய இளம்பெண்ணொருவர் அமெரிக்காவிலிருக்கும் தனது தாத்தா பாட்டியை சந்திப்பதற்காக புறப்பட்ட நிலையில், அமெரிக்காவுக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இம்மாதம், அதாவது, நவம்பர் மாதம் 3ஆம் திகதி, ரொரன்றோவைச் சேர்ந்த ஜூலியா (20) என்னும் இளம்பெண், அமெரிக்காவில் வாழும் தன் தாத்தா பாட்டியை சந்திப்பதற்காக Pearson சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார்.

ஆறு வாரங்கள் ஃப்ளோரிடாவிலிருக்கும் தன் தாத்தா பாட்டியுடன் தங்க திட்டமிட்டிருந்த ஜூலியா, அதற்காக முறைப்படி ரிட்டர்ன் டிக்கெட்டும் வாங்கியுள்ளார்.
விமான நிலையத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருந்த ஜூலியா அமெரிக்க சுங்க அதிகாரிகளை சந்திக்கும் நேரம் வந்தபோது, அவர்கள் கேட்ட கேள்விகளிலிருந்து, தான் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு புலம்பெயரும் திட்டத்துடன் அமெரிக்கா செல்வதாக அவர்கள் சந்தேகிப்பது தெரியவந்ததாக தெரிவிக்கிறார் ஜூலியா.
விமானத்தை தவறவிட்டுவிடுவோமோ என்ற பதற்றத்துடன் ஜூலியா காத்திருக்க, சிறிது நேரத்துக்குப் பின், உங்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதியில்லை என தெரிவித்துள்ளார்கள் அமெரிக்க அதிகாரிகள்.
உங்களுக்கு அமெரிக்காவுக்கு புலம்பெயரும் எண்ணம் ஏதாவது உள்ளதா என ஜூலியாவைக் கேட்டால், எனக்கு அமெரிக்காவில் வாழும் எண்ணம் சற்றும் இல்லை என்கிறார் அவர்.
இந்நிலையில், அமெரிக்கா புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்திவரும் நிலையில், இப்படி கனேடியர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது இப்போது அடிக்கடி நடக்கிறது என்கிறார் புலம்பெயர்தல் சட்டத்தரணியான Heather Segal.
இதற்கிடையில், ஜூலியாவுக்கு நிகழ்ந்ததைக் குறித்து தகவலறிந்த விமான நிறுவனம் அவரது டிக்கெட்டுக்கான பணத்தை முழுமையாக திருப்பிக் கொடுத்துவிட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |