மனைவி உட்பட 6 பேர் சுட்டுக் கொன்ற இளைஞன் ; துருக்கியில் நடந்தேறிய கொடூரம்
துருக்கியின் தெற்குப் பிராந்தியத்தில் உள்ள மெர்சின் மாகாணத்தின் தர்சூஸ் நகரில், துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் அடுத்தடுத்து நடத்திய தொடர் தாக்குதல்களில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் எண்மர் படுகாயமடைந்துள்ளனர்.
தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பியோடிய 37 வயதுடைய சந்தேகநபரை, ஹெலிகொப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் உதவியுடன் பொலிஸாரும் இராணுவத்தினரும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அரச ஊடகமான அனடோலு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகநபர், மிகக் கொடூரமான முறையில் நகரின் வெவ்வேறு பகுதிகளில் இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளார்.
சந்தேகநபர் முதலில் தர்சூஸ் நகரின் வீதியொன்றில் வைத்துத் தனது மனைவியைச் சுட்டுக் கொன்றுள்ளார்.
பின்னர் தனது காரில் தப்பியோடிய அவர், வழியிலிருந்த உணவகம் ஒன்றின் மீது காரிலிருந்தவாறே சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதில் உணவகத்தின் உரிமையாளரும், அங்கு பணிபுரிந்த ஊழியர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதன் பின்னரும் அடங்காத கொலையாளி, மற்றொரு அக்கம் பக்கத்து குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து அங்கிருந்த ஒரு பதின்ம வயது சிறுவன், 50 வயது மதிக்கத்தக்க முதியவர் உட்பட மேலும் மூவரைச் சுட்டுக் கொன்றுள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய துருக்கி ஜனாதிபதி ரசெப் தையிப் எர்டோகன், இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
எனினும், கொலையாளியின் பின்னணி அல்லது இந்தத் தாக்குதல்களுக்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து அவர் மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.