அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண்ணை சுட்டுகொன்ற இளைஞன்! அதிர்ச்சி சம்பவம்
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தின் கார்டெரெட் பகுதியில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண்ணொருவர் சுட்டுகொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 20 வயதான ககன்தீப் கவுர் என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தின் கார்டெரெட் பகுதியில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 29 வயதான ஜஸ்வீர் கவுர் வசித்து வந்துள்ளார்.
இவர், கார்டெரெட் பகுதியில் உள்ள அமேசான் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவரது கணவர் லொரி சாரதியாக வேலை பார்க்கிறார்.
கடந்த புதன்கிழமை காலையில், இவரது வீட்டிற்கு உறவுக்கார பெண்ணான 20 வயதான ககன்தீப் கவுர் வந்திருந்தார். அப்போது, 19 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர், ககன்தீப் கவுரை வீட்டிற்கு வெளியே சந்தித்து பேசியுள்ளார்.
சிறிது நேரத்தில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ககன்தீப் கவுர், உதவிக்கு ஜஸ்வீர் கவுரை அழைத்துள்ளார். அவர் வந்து பிரச்சினையில் தலையிட்டு ககன்தீப் கவுருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த அந்த இளைஞன், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ஜஸ்வீர் கவுரை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். ககன்தீப் கவுரையும் சுட்டுள்ளார்.
குறித்த தாக்குதலில் பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ஜஸ்வீர் கவுர் உயிரிழந்தார்.
ககன்தீப் கவுருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தாக்குதல் நடத்திய இளைஞனை பொலிஸார் கைது செய்தனர்.
பொலிஸ் விசாரணையில், சந்தேக நபர் வாஷிங்டனின் கென்ட் நகரில் வசித்து வரும் 19 வயதான கவுரவ் கில் என்பதும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
அவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மாணவர் விசாவில் அமெரிக்காவுக்கு படிக்க வந்த ககன்தீப் கவுர், அண்மையில் தனக்கு படிப்பில் சிக்கல் இருப்பதாக ஜஸ்வீர் கவுரிடம் கூறியிருக்கிறார்.
ஆனால் அவருக்கும் கவுரவ் கில்லுக்கும் என்ன தொடர்பு? ஏன் இருவருக்கிடையே சண்டை ஏற்பட்டது? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இருவரும் இதற்கு முன்பு இந்தியாவில் ஒரே கல்வி நிறுவனத்தில் படித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.