அமைதி ஒப்பந்த முயற்சியில் ஜெலன்ஸ்கி முடிவெடுக்க வேண்டும்; ட்ரம்ப் அதிரடி
யுக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி விரும்பினால், ரஷ்யாவினால் முன்னெடுக்கப்படும் போரை முடிவிற்குக் கொண்டு வர முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால், கடந்த 2014 ஆம் ஆண்டு ரஷ்யாவினால் இணைக்கப்பட்ட, கிரிமியன் தீபகற்பத்தை யுக்ரைனால் மீட்டெடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் இடம்பெறவுள்ள சந்திப்பில், 5 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் தமது ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் ஜெலன்ஸ்கியுடன் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பிற்கு முன்னதாக, ரஷ்ய மற்றும் யுக்ரைன் போரை முடிவிற்குக் கொண்டு வருவதற்கு ஏற்ற வகையில் அமைதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக யுக்ரைன், நேட்டோவுடன் இணைவதை டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.
இதேவேளை, வெள்ளை மாளிகையில் ஸெலன்ஸ்கியுடன், இடம்பெறும் பேச்சுவார்த்தையில் அமைதி ஒப்பந்தம் தொடர்பான விதிமுறைகள் குறித்து ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் அமெரிக்க ஜனாதிபதி உறுதியாகவுள்ளதாக, அமெரிக்க விசேட தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பெறுபேறுகளுக்கு அமையவே, டொனால்ட் ட்ரம்ப், ஜெலன்ஸ்கி மற்றும் புடின் ஆகியோருக்கு இடையிலான முத்தரப்பு சந்திப்புக்கான வாய்ப்பு அமையும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.