ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனம்: ஐநாவில் அம்பலப்படுத்தும் ஜெலென்ஸ்கி
ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் முதன் முறையாக உரையாற்றவிருக்கும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனத்தை அம்பலப்படுத்துவேன் என சூளுரைத்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முதன் முறையாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்பு கவுன்சிலில் செவ்வாய்க்கிழமை உரையாற்றவிருக்கிறார்.
அதில், புச்சா உள்ளிட்ட உக்ரைன் நகரங்களில் ரஷ்ய துருப்புகள் முன்னெடுத்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவேன் என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
புச்சா நகரில் இருந்து ரஷ்ய துருப்புகள் பின் வாங்கிய நிலையிலேயே இந்த கொடூரங்கள் அம்பலமாகியுள்ளது. குறித்த சம்பவம் உலகளாவிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரஷ்ய அரசாங்கம் முற்றாக மறுப்பு தெரிவித்துள்ளதுடன், திட்டமிட்ட நாடகம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, ஐ.நா மனிதாபிமானத்துறை தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ், உடனடி போர்நிறுத்தத்தை ஏற்பாடு செய்ய முயற்சித்துள்ளதுடன், திங்களன்று மாஸ்கோவில் மூத்த ரஷ்ய அதிகாரிகளை சந்தித்துள்ளார்.
மட்டுமின்றி, விரைவில் இந்த விவகாரம் தொடர்பில் விவாதிக்க உக்ரைனுக்குச் செல்கிறார். புச்சா நகரில் ரஷ்ய துருப்புகள் வெளியேறிய பின்னர் மொத்தம் 410 சடலங்கள் கைப்பற்றப்பட்டதாக அரசு தரப்பு சட்டத்தரணி அலுவலகம் தெரிவித்துள்ளது.
பலர் கைகள் பின்னால் கட்டப்பட்டும், சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டும், கொடூர துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கப்பட்டுள்ள நிலையிலும் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பலர் மிக அருகாமையில், துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். மட்டுமின்றி, புச்சா நகரம் மொத்தமாக சிதைக்கப்பட்டுள்ளது என்றே அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றனர்.