லண்டனை ஸ்தம்பிக்க வைக்கவுள்ள காலநிலை மாற்றத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்!

Report

மத்திய லண்டனின் சில பகுதிகளை அடுத்த சில நாட்களுக்குச் செயலிழக்க செய்ய காலநிலை மாற்றத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர்.

காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்காக இன்னும் கூடுதலான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை தூண்டுவதற்காக நகரின் பரபரப்பான தெருக்கள் சிலவற்றை ஸ்தம்பிக்க வைக்கவுள்ளதாக ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இன்று காலை 10 மணி தொடக்கம் லண்டனின் முக்கிய இடங்களான மார்பிள் ஆர்ச் (Marble Arch), ஒக்ஸ்போர்ட் சேர்க்கஸ் (Oxford Circus), வோட்டர்லூ பாலம் (Waterloo Bridge0, பாராளுமன்ற சதுக்கம் (Parliament Square) மற்றும் பிக்கடில்லி சேர்க்கஸ் (Piccadilly circus) ஆகிய பகுதிகளில் வீதிமறியல் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு, பகல் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ள இந்த வீதிமறியல் ஆர்ப்பாட்டங்கள் குறைந்தபட்சம் ஐந்து நாட்களுக்கு நீடிக்குமென ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2025-ஆம் ஆண்டுக்குள் பசுமையில்ல வாயு உமிழ்வுகளை நிகர பூஜ்ஜியத்திற்குக் குறைத்தல், காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அவசர நிலையை அறிவித்தல், காலநிலை மாற்றம் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு பொதுமக்கள் அடங்கிய சட்டமன்றம் ஒன்றை உருவாக்குதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து எக்ஸ்ரின்ஷன்ரெபெலியன் (Extinction Rebellion) என்ற குழுவினால் இப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த மாத ஆரம்பத்தில் அரை நிர்வாண ஆர்ப்பாட்டமொன்றை பாராளுமன்றத்தின் ஹவுஸ் ஒப் கொமன்ஸில் இக்குழு உறுப்பினர்கள் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

318 total views