கனடா நாட்டவர்களை சீனாவில் தடுத்து வைக்கப்பட்டதின் எதிரொலி! ஹூவாவே தலைவர் விவகாரமும் இழுபறி

Report

கனடா நாட்டவர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டு அவர் மீது போதைப்பொருள் சம்பந்தமாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதால் சீனாவுக்கும் கனடாவுக்கு இடையிலான ராஜதந்திர விவகாரங்கள் தற்போது இழுபறி நிலையை அடைந்துள்ளன.

ஏற்கனவே, இரண்டு கனடா நாட்டு ராஜதந்திரிகள் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த காரணங்களால் சீனாவின் தொலைத்தொடர்பு முன்னோடியான ஹூவாவேயின் தலைமை நிறைவேற்று அதிகாரி மெங் வாங்ஷோவின் விவகாரம் தொடர்ந்தும் இழுபறி நிலையில் உள்ளது.

சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடிய குடிமகன் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பெய்ஜிங் நிர்வாக நேற்று அறிவித்திருந்தது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் உடன்பாட்டின் அடிப்படையில் வான்கூவர் நகரில், மெங் வான்ஷோவை தடுத்து வைத்திருப்பதன் மூலம் தூண்டப்பட்ட ஒரு இராஜதந்திர நெருக்கடியின் மத்தியில் அண்மைய கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

ஷாண்டோங் மாகாண பொது பாதுகாப்பு பணியகம் சமீபத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் தொடர்பான வழக்கை கையாண்டு வருவதாக வௌிவிவகாரத்துறை அமைச்சின் பேச்சாளர் ஜெங் ஷூவாங் நேற்று செய்தியாளர் சந்திப்பொன்றின் போது தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் ஒருவர் தொடர்புபட்டிருப்பதாகவும், இந்த வழக்கு விசாரணை மட்டத்தில் உள்ளதாகவும், தொடர்புடைய தூதரகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெங் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷாங்டொங் மாகாணத்தில் கனடா நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தூதரக ரீதியாக உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கனடா தெரிவித்துள்ளது.

இதனிடையே, மெங் வான்ஷோ கைது செய்யப்பட்ட தினத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1609 total views