‘கோபூஜை’ நடத்தியது ஏன்? 'தாமரை' வைத்து வழிபட்டது எதற்கு?- ஆச்சார்யர்களின் விளக்கம்.

Report
18Shares

ஜெயா டி.வி., ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் கம்பெனி, தினகரன் வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடு, கர்நாடக மாநிலத்தில் உள்ள கட்சி அலுவலகம் என சசிகலா, தினகரனுக்குத் தொடர்பு உள்ள 150 இடங்களில், வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பரபரப்புக்கு உள்ளான நிலையில், தினகரன் தன் வீட்டில் மனைவியுடன் சேர்ந்து, கோ பூஜை செய்தார்.

ரெய்டுக் காட்சிகள் அரங்கேறிய அதே வேளையில், கோபூஜை செய்ததும் இன்னும் பரபரப்பை எகிற வைத்திருக்கிறது. பசுவையும் கன்றையும் வைத்து, அவற்றிற்கு பூவும் பொட்டும் வைத்து, மனைவியுடன் தினகரன் பசுவைச் சுற்றி வந்து, தீபாராதனைகள் காட்டி பூஜைகள் செய்தார். குறிப்பாக, பசுவின் முதுகில், தாமரைப் பூவை வைத்து பூஜைகள் செய்தது அனைவரையும் கவனிக்க வைத்தது.

பொதுவாக கிரகப் பிரவேசம் முதலான விசேஷங்களின்போது கோபூஜை செய்வது வழக்கம். மற்றபடி, பசுவைப் பார்க்கிறபோது, அந்தப் பசுவுக்கு பழமோ உணவோ கொடுப்பார்கள். அமாவாசை முதலான நாட்களில் அகத்திக் கீரை வாங்கிக் கொடுப்பவர்களும் உண்டு. சாலையில், வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருக்கும் பசுவைப் பார்த்ததும், காரில் செல்பவர்கள் கூட, இறங்கிச் சென்று, பசுவைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டு, வணங்கிச் செல்வதைப் பார்த்திருக்கலாம்.

தமிழகம் முழுவதும் சசிகலா, தினகரனுக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்து வருகிற இந்த இக்கட்டான நிலையில், தினகரன் கோபூஜை செய்வது எதற்காக? பொதுவாக கோபூஜை செய்வதால் என்னென்ன பலன்கள் உண்டு என வேதம் அறிந்த, சாஸ்திரம் அறிந்த சிலரிடம் கேட்டோம்.

‘’தீர்த்த யாத்திரை என்கிறோம். இந்தியா முழுவதும் கங்கா, காவிரி, தாமிரபரணி, யமுனை என எவ்வளவு புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. இந்த நதிகளில் நீராடினால் புண்ணியம் பெருகும், பாவங்கள் தொலையும் என்கிறது சாஸ்திரம். ஆனால் இவற்றைச் செய்ய எவ்வளவு காலமாகும் யோசியுங்கள். ஏழு கோடி தீர்த்தங்கள் பரதக் கண்டத்தில் இருப்பதாகச் சொல்கிறது சாஸ்திரம். இவை அனைத்திலும் நீராடினால் என்ன பலன் கிடைக்குமோ, அவை ஒரேயொரு கோபூஜையில் கிடைப்பதாகவும் சொல்கின்றன ஞானநூல்கள்” என்கிறார் ஸ்ரீநிவாச சர்மா.

‘’இந்திய கண்டத்தில், எத்தனையோ கோயில்கள். அங்கே ஏராளமான தெய்வங்கள். அத்தனை தெய்வங்களையும் தரிசித்தால் என்ன பலன்கள் கிடைக்குமோ, அவ்வளவு க்ஷேத்திரங்களுக்குச் சென்றால் எவ்வளவு சக்தி நமக்குக் கிடைக்குமோ, அவை கோபூஜையில் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். அத்தனை சிருஷ்டிகளையும் செய்தவர் பிரம்மா. ஆனால் கோமாதா அவரின் சிருஷ்டி இல்லை. முப்பத்து முக்கோடி தேவதைகள் ஒரு பசுவில் குடிகொண்டிருக்கின்றனர். ஆகவே, கோபூஜை செய்தால், சகல தோஷங்களும் விலகும். முப்பத்து முக்க்கோடி தேவதைகளின் ஆசியும் கிடைக்கும். குறிப்பாக, பிரம்மஹத்தி முதலான தோஷங்களும் பாபங்களும் விலகும் என்பது ஐதீகம்’’ என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

தினகரன் நடத்திய கோபூஜையில் பசுவின் முதுகில் தாமரை. குறிப்பாக, கோபூஜைக்கும் தாமரைக்குமான தொடர்பு என்ன என்று கேட்டோம்..

‘’கோ என்பது லக்ஷ்மி அம்சம். வெண் தாமரையில் வீற்றிருப்பவள் சரஸ்வதி. செந்நிறத் தாமரையில் நிற்பவள் லக்ஷ்மி. அஷ்டபுஷ்பங்கள் என்று சொல்லும் போது, ரத்தபுஷ்பம் என சம்ஸ்கிருதத்தில் சொல்லப்படுகிற செந்நிறத் தாமரைப் பூவுக்கு தனி மகத்துவமும் வீரியமும் உண்டு. அதனால் தாமரையைப் பயன்படுத்தி கோபூஜை செய்வதே உத்தமம். கோபூஜை செய்வதால், கோ என்பது லக்ஷ்மியின் அம்சம் என்பதால், இழந்ததைப் பெற முடியும். எதையும் இழக்காமல் இருக்கும் வலிமையைத் தரும். லக்ஷ்மி கடாட்சம் நம்முடனேயே இருக்கும்.’’ என்று தஞ்சாவூர் ரமேஷ் ஜம்புநாத குருக்கள் தெரிவித்தார்.

கோபூஜையை மனைவியுடன் சேர்ந்துதான் செய்யவேண்டுமா என்று கேட்டதற்கு ஸ்ரீநிவாச சர்மா விளக்கம் அளித்தார். சாஸ்திரத்திலும் வேதத்திலும் தம்பதி சமேதராகத்தான் எதையும் செய்யவேண்டும். மந்திரம் சொல்லும்போதே, ‘தர்மபத்தினி’ என்று ஒரு வார்த்தை உண்டு. பூஜையாகட்டும், புண்ணிய க்ஷேத்திரமாகட்டும், புனித நீராடலாகட்டும் எதுவாக இருந்தாலும் மனைவியுடனே செய்தால்தான் பலன்கள் கிடைக்கும் என்கிறது சனாதன தர்மம். ஒருவேளை வேலை விஷயமாகவோ, வேறு காரணங்களுக்காகவோ மனைவி அருகில் இல்லாத வேளையில், கோபூஜை செய்தாலோ, புண்ணிய நதியில் நீராடினாலோ, மனைவியின் ரவிக்கையை கணவன் இடுப்பில் செருகிக் கொண்டோ கட்டிக் கொண்டோ அதைச் செய்யவேண்டும் என அறிவுறுத்துகிறது சாஸ்திரம். அதேபோல், கணவன் வெளியூரில் இருந்தாலோ, வெளிநாட்டில் இருந்தாலோ, அந்த சமயத்தில் கோபூஜை செய்தால், ஒரு மணைப்பலகையில் கணவரின் வேஷ்டி அங்கவஸ்திரத்தை அருகில் வைத்துக் கொண்டு, பூஜையில் ஈடுபடலாம்.

பொதுவாகவே, பட்டுக்கு எந்த தோஷமும் இல்லை. கோபூஜை மாதிரி பூஜைகள் செய்யும்போது, பட்டு வஸ்திரங்கள் அணிவதே நல்லது. இயலாத நிலையில், வேஷ்டி, புடவை கட்டிக் கொள்ளலாம். ஆனால் ஜீன்ஸ், சுடிதார் அணிந்து பூஜையில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதே உத்தமம்’’ என்றார்.

மன்னன் ஒருவன். தன் ராஜ்ஜியத்தில் உள்ள பல தேசங்களை இழந்திருந்தானாம். ஒருநாள் குதிரையில் சென்ற போது, அந்தக் குதிரையின் குளம்படியில் இருந்து தூசு பறந்து, அருகில் இருந்தவன் மூச்சுத் திணறி இறந்தான். இதில் தவித்துப் போன மன்னன், தன் குருவிடம் இதுகுறித்துக் கேட்டான். ‘உனக்கு நேர்ந்த தோஷத்தில் இருந்தும் பாபத்தில் இருந்தும் விடுபட, கோபூஜை செய் என அறிவுரை கூறினார் குரு. அதன்படி கோபூஜை செய்தான் மன்னன். பாவத்தில் இருந்து மட்டுமின்றி, இழந்துவிட்ட ராஜ்ஜியங்களையும் மன்னன் அடைந்தான் என்றொரு புராணக் கதை உண்டு.

”ஒரு பசுவைக் கொல்வதும் அந்தணனைக் கொல்வதும் மிகப்பெரிய பாவம் என்கிறது சாஸ்திரம். இவற்றையெல்லாம் பிரம்மஹத்தி தோஷம், பாவம் என்பார்கள். பசுவுக்குக் கீரை கொடுப்பதால், பித்ரு சாபம் நீங்கும். உணவு வழங்குவதால், நம் வீட்டில் உள்ள தனம், தானியம், ஆபரணம், பூமிக்கு எந்தப் பங்கமும் வராது. கோபூஜை செய்வதால், இழந்த ராஜ்ஜியத்தைப் பெறலாம். இழந்த கெளரவத்தையும் பதவியையும் பெறலாம். இனி இழக்காமல் தடுக்கும் சக்தியும் கோபூஜைக்கு உண்டு. பிரம்மஹத்தி முதலான தோஷங்களும் விலகும்’’ என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

1568 total views