அக்கா- தங்கை இருவரும் கழுத்தறுத்து கொலை

Report
141Shares

திருவேற்காடு, மாதிரி வேடு மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை, தொழில் அதிபர். இவரது மனைவி அமீனா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஏழுமலை அவரது தாய் ரங்கநாயகியுடன் (வயது 85) வசித்து வந்தார்.

இந்த நிலையில் ஓசூரில் உள்ள அவர்களது உறவினர் ஒருவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. அவரை பார்ப்பதற்காக நேற்று காலை ஏழுமலை குடும்பத்துடன் அங்கு சென்றார். தாய் ரங்கநாயகி மட்டும் வீட்டில் இருந்தார்.

வீட்டில் தனியாக இருந்த ரங்கநாயகி துணைக்காக அதே பகுதியில் வசித்த தங்கை கிருஷ்ணவேணியை (80) வீட்டிற்கு அழைத்து இருந்தார். நேற்று இரவு சகோதரிகள் இருவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றனர்.

கிருஷ்ணவேணியின் வளர்ப்பு மகன் சரவணன் என்பவர் அவர்களுக்கு ‘டீ’ வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது முன்பக்க அறையில் ரங்கநாயகி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அருகில் உள்ள கழிவறையில் கிருஷ்ணவேணியும் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரவணன் திருவேற்காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மோப்ப நாயுடன் வந்து விசாரணை நடத்தினர்.

வீடு முழுவதும் ரத்தக்கறை கிடந்தது. மேலும் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. ரங்கநாயகி, கிருஷ்ணவேணி அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்தன. பீரோவில் இருந்த நகை, பணமும் கொள்ளை போய் இருந்தது. மேலும் கண்காணிப்பு கேமிரா பதிவுகளும் மாயமாகி இருந்தன.

இது குறித்து திருவேற்காடு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது இரட்டை கொலை செய்தவர் ரங்கநாயகியின் வளர்ப்பு மகன் பாலகிருஷ்ணன் என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

சொத்து பிரித்து கொடுக்காத ஆத்திரத்தில் அவர் வீட்டில் ஆட்கள் இல்லாததை பயன்படுத்தி தாய் ரங்கநாயகியை கொலை செய்ததும், இதனை பார்த்த கிருஷ்ணவேணியையும் தீர்த்துக்கட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

ரங்கநாயகி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வளர்ப்பு மகன் பாலகிருஷ்ணனுக்கு சொத்துக்கள் கொடுத்தார். அவருக்கு குறைவான சொத்து பிரித்து கொடுத்ததாக தெரிகிறது.

இதையடுத்து முறைப்படி சொத்து கொடுக்கும்படி பாலகிருஷ்ணன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் அவருக்கும் ரங்கநாயகி மற்றும் அவரது மகன் ஏழுமலை ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இநத நிலையில் நேற்று நள்ளிரவு சொத்து தொடர்பாக ரங்கநாயகியிடம் பாலகிருஷ்ணன் மீண்டும் கேட்டு இருக்கிறார். அப்போது ஏற்பட்ட தகராறில் அவர் வளர்ப்பு தாய் ரங்கநாயகி மற்றும் உடனிருந்த கிருஷ்ணவேணி ஆகியோரை தீர்த்துக் கட்டியது விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொலையில் பாலகிருஷ்ணன் மட்டும் ஈடுபட்டு இருக்க முடியாது என்று போலீசார் நம்புகிறார்கள். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

கொலையில் இருந்து தப்பிக்க வீட்டில் மிளகாய் பொடிகளை தூவி பாலகிருஷ்ணன் கொள்ளை நாடகம் அரங்கேற்றி இருக்கிறார். போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை செய்தபோது சொத்து தகராறு இருப்பது தெரிந்தது.

இதைத் தொடர்ந்து பாலகிருஷ்ணனிடம் கிடுக்கிப்பிடி விசாரணையின் போது கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

சொத்து தகராறில் அக் காள்-தங்கை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவேற்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

6688 total views