சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க பெண் தொழில் அதிபர் சிறைவைப்பு

Report
23Shares

அமெரிக்காவை சேர்ந்த பெண் தொழில் அதிபர் காசா எலிசபெத் வண்டே (வயது 48). இவர், பலமுறை வருவதற்கான வர்த்தக விசா அடிப்படையில், இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தார். புதுச்சேரியில் சிற்றுண்டி விடுதியும், சிறிய துணிக்கடையும் நடத்தி வருகிறார்.

இவர், அமெரிக்காவில் இருந்து குவைத் ஏர்லைன்ஸ் மூலம், கடந்த 5-ந் தேதி அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது, அதிகாரிகள் அவரை அணுகி, அவர் பெயர் கருப்பு பட்டியலில் இருப்பதாக கூறி, அவரை அங்கேயே சிறை வைத்தனர். வர்த்தக விசாவை வைத்துக்கொண்டு, புதுச்சேரியில் ஒரு தொண்டு நிறுவன பணிகளில் ஈடுபட்டதால், விசா விதிமீறலின் பேரில், அவரது பெயர் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டதாக அவர்கள் கூறினர். பின்னர், அதே நாளில் ஒரு விமானத்தில் காசா எலிசபெத், அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

முன்னதாக, அவர் சென்னை விமான நிலையத்தில் தடுக்கப்பட்டவுடன், அவரது அறிவுறுத்தலின்படி, அவருடைய வக்கீல் மிஸ்ரா என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். காசாவை திருப்பி அனுப்ப தடை விதிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் முரளிதர், ஐ.எஸ்.மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. காசாவை ஏற்கனவே திருப்பி அனுப்பிவிட்டதால், அதற்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் எழவில்லை என்று நீதிபதிகள் கூறினர்.

1645 total views