சென்னை விடுதியில் வெளிநாட்டுப் பெண் மர்ம மரணம்

Report
61Shares

பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியில் மர்மமான முறையில் மரணமடைந்து கிடந்தார்.

பின்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் எமிலியா(22). இவர் தனது காதலர் ஜோயல் சாண்டரி(28) என்பருடன் கடந்த மாதம் இந்தியாவை சுற்றிப்பார்க்க டெல்லி வந்தார். அங்கிருந்து இந்தியாவின் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கும் சென்று சுற்றிப்பார்த்தவர்கள் நேற்று காலை சென்னை வந்தனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இருவரும் ஒன்றாக அறை எடுத்து தங்கினர். நேற்றிரவு இருவரும் போதை மாத்திரைகள் மற்றும் மதுவை அதிக அளவில் எடுத்துக் கொண்டுள்ளனர்.

இன்று காலை காதலர் ஜோயல் சாண்டரி பதற்றத்துடன் விடுதி நிர்வாகத்தினரிடம் தனது காதலி மயக்க நிலையில் இருப்பதாகவும் உடனடியாக ஆம்புலன்சை அழைக்குமாறு கூறியுள்ளார்.

உடனடியாக விடுதி நிர்வாகத்தினர் 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளனர். ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் சோதனை செய்தபோது எமிலியா ஏற்கனவே இறந்து போனது தெரியவந்தது.

இதையடுத்து திருவல்லிக்கேணி போலீஸாருக்கு விடுதி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திருவல்லிக்கேணி போலீஸார் எமிலியாவின் உடலை கைப்பற்றி அருகில் பிரேத பரிசோதனைக்காக அரசு பண்ணோக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் காதலர் ஜோயல் சாண்டரியின் பாஸ்போர்ட், சுற்றுலா விசா மற்றும் ஆவணங்களை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் எமிலியவும் ஜோயல் சண்டரியும் அதிக அளவில் போதை பொருட்கள் உட்கொண்டது தெரிய வந்துள்ளது.

இவர்கள் இருவரும் வெளிநாட்டவர் என்பதால் டெல்லியில் உள்ள பின்லாந்து துணை தூதரகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர். தற்போது எமிலியாவின் மரணம் சந்தேக மரணம் பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எமிலியாவுக்கும் அவரது காதலருக்கும் போதைமாத்திரைகள் எங்கிருந்து கிடைத்தன. அவை என்ன வகை மாத்திரைகள் எம்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

2973 total views