இந்தியாவில் நேர்ந்த கொடுமை: சிறுநீரை குடிக்க வைத்து இளைஞர் பலி!

Report

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தலித் நபர் ஒருவரை சிறுநீரை குடிக்க வைத்து அடித்து துன்புறுத்தியதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தலித் நபர் ஒருவர் அங்குள்ள உயர் சாதியினரால் மிகவும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவரை அடித்து துன்புறுத்தியதுடன், சிறுநீர் குடிக்கவும் கட்டாயப்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பின்னர் தகவலறிந்த பொலிஸார் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக சங்ரூர் மூத்த பொலிஸ் சூப்பிரண்டு சந்தீப் கார்க் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். பஞ்சாபில் சங்கலிவாலா என்ற கிராமத்தில் வசிக்கும் தலித் நபர், கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி ரிங்கு மற்றும் வேறு சிலருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், அருகில் உள்ள மக்கள் இவர்களது வாக்குவாதத்தை தீர்த்து வைத்தனர். ஆனால், அதன் பின்னரும் ரிங்கு வீட்டில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

மேலும், கயிறால் கட்டி தன்னைத் தாக்கியதாகவும், தண்ணீர் கேட்டதற்கு சிறுநீரை கொடுத்து குடிக்கச் செய்ததாகவும், இறப்பதற்கு முன்னதாக தலித் நபர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாப் மாநில பட்டியல் சாதி ஆணையமும் சங்ரூர் மூத்த காவல்துறை கண்காணிப்பாளரிடம் அறிக்கை கோரியுள்ளது.

மேலும், தலித் நபர் உயிரிழந்ததையடுத்து, அவரது மரணத்திற்கு நீதி கேட்டு அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

987 total views