நிர்பயா குற்றவாளிகளின் கடைசி முயற்சி தோல்வி! ஜனவரி 22ல் தூக்கு உறுதி

Report

நிர்பயா வழக்கில், துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு பேரில் வினய் குமார் சர்மா மற்றும் முகேஷ் சர்மா, ஆகியோர் தண்டனையிலிருந்து தப்பிக்க மேற்கொண்ட கடைசி முயற்சி உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனையடுத்து, அவர்கள் வரும் ஜனவரி 22 காலை 7 மணிக்கு தூக்கில் போடுவது உறுதியாகியுள்ளது. டில்லியில், கடந்த 2012இம் ஆண்டு 23 வயதான நிர்பயா என்ற மருத்துவ மாணவி, ஓடும் பஸ்சில், ஆறு பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் துாக்கி வீசப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில், சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவி இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, 16 வயது சிறுவன் உட்பட ஆறு பேரை பொலிஸார் கைது செய்தனர். இதில், சிறுவனுக்கு மட்டும் சிறார் சட்டப்படி, மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, மற்ற ஐந்து பேரில், ராம் சிங் என்பவர், துாக்கு மாட்டி தற்கொலை செய்தார். மற்ற நால்வருக்கும், விசாரணை நீதிமன்றம் விதித்த துாக்கு தண்டனையை, டில்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.

இதை எதிர்த்து, நான்கு பேரும் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, நான்கு பேருக்கும் வரும் 22ம் தேதி காலை 7:00 மணிக்கு திஹார் சிறையில் துாக்கு தண்டனையை நிறைவேற்ற டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு பேரில் முகேஷ் மற்றும் வினய் குமார் சர்மா ஆகியோர் தண்டனையிலிருந்து தப்பிக்க, கடைசி முயற்சியாக 'கியூரேட்டிவ்' மனு எனப்படும் குறை தீர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு இன்று (ஜனவரி14) விசாரணைக்கு வந்த போது அந்த மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, 4 பேரும் வரும் 22ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கில் போடுவது உறுதியாகியுள்ளது.

1288 total views