வேலைக்கு சேர்ந்த பெண்களை கொடுமைப்படுத்திய தம்பதி

Report

சிங்கப்பூரில் இரவு விடுதிகள் வைத்து நடந்து வந்த இந்திய தம்பதி, மூன்று இளம்பெண்களை அடிமைப்படுத்தி வைத்த வழக்கில் குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியவை பூர்விகமாக கொண்ட பிரியங்கா பட்டாச்சார்யா ராஜேஷ் (31) மற்றும் மல்கர் சவ்லாரம் அனந்த் (51) என்கிற தம்பதி சிங்கப்பூரில் இரண்டு இரவுநேர விடுதிகளை வைத்து நடத்தி வந்துள்ளனர்.

மல்கர் தங்களுடைய விடுதியில் மூன்று வங்கதேச பெண்களை நடன கலைஞர்களாக நியமித்துள்ளார். அவர்கள் மூவரையும் குடியிருப்பில் இருந்து வெளியேற விடாமல், பாஸ்போர்ட் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.

அவர்களை தினமும் வேலை செய்ய வற்புறுத்தியதோடு, இரண்டு பெண்களுக்கு மாத சம்பளம் கூட வழங்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

அவர்களுக்கான வருவாய் இலக்குகள் குறைந்தால், சம்பளத்தை குறைப்பது, அபராதம் விதிப்பது, காத்திருப்பு பட்டியலில் வைப்பது போன்ற தண்டனைகளை கொடுத்துள்ளனர்.

விடுதிக்கு வரும் ஆண்களுடன் வெளியில் செல்ல வேண்டும் எனவும் பாலியல் தொழிலில் ஈடுபடுமாறும் கட்டாயப்படுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் மூன்று பெண்களின் சாட்சியங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இருவரும் குற்றவாளிகள் எனக்கூறி தீர்ப்பளித்தார். மேலும் அவர்களுக்கான தண்டனை விவரம் டிசம்பர் 19ம் திகதி அறிவிக்கப்படும் எனவும் கூறி உத்தரவிட்டார்.

6074 total views