ஊதிய உயர்வு கோரிய ஆசிரியைக்கு நடந்த விபரீதம்

Report
48Shares

பாடசாலை நிர்வாக சபை கூட்டத்தின் போது பாடசாலை நிர்வாக அதிகாரியிடம் சம்பள உயர்வு கோரியமைக்காக ஆசிரியையொருவர் அங்கிருந்து கைவிலங்கிடப்பட்டு பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அமெரிக்க லூஸியானா மாநிலத்தில் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.

அந்தப் பாடசாலையில் மொழி தொடர்பான கற்பித்தலில் ஈடுபட்டு வரும் டேஷியா ஹார்கிரேவ் என்ற மேற்படி ஆசிரியை பாடசாலை நிர்வாக சபையின் பொது விமர்சனக் கூட்டத்தின் போது எழுந்திருந்து ஆசிரியர்களின் சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கையை முன் வைத்தார்.

பாடசாலை நிர்வாக அதிகாரியால் முன்வைக்கப்பட்டுள்ள செயல்திறன் இலக்குகள் தொடர்பிலான அடைவுகளுக்காக ஊதிய உயர்வு வழங்கும் புதிய நடைமுறையால் அந்தப் பாடசாலையிலுள்ள ஆசிரியர்கள், உணவக உத்தியோகத்தர்கள் மற்றும் உதவியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தாம் கடுமையாக உழைக்கின்ற போதும் தமக்கு குறைந்தளவு ஊதிய உயர்வே வழங்கப்டுவதாக குற்றஞ்சாட்டினார்.

“ நாம் மிகவும் குறைந்தளவான ஊதிய உயர்வைப் பேண கடுமையாக உழைக்கிறோம். ஆனால் பாடசாலை நிர்வாத்தால் நிர்ணயிக்கப்பட்ட செயல்திறன் அடிப்படையிலான குறிப்பிட்ட இலக்குகள் எமது பணியால் எட்டப்படுகின்றனவா என்பது தொடர்பில் நாம் கவலைப்படவில்லை.

உங்கள் இலக்குகள் எமது பணியை மேலும் கடுமையாவனவாகவுள்ளன. நாங்கள் அதையும் மீறி இலக்குகளை எட்டும் பட்சத்தில் அது தொடர்பில் அது தொடர்பான பதவி நிலையிலுள்ளவருக்கே ஊதிய உயர்வு கிடைக்கிறது.

இது ஆசிரியர் ஒருவருக்கு துன்பகரமானதாகும். இதன் போது ஆசிரியர்கள் தமது முகத்தில் அறைவது போன்று உணர்கின்றனர்" .எனத் தெரிவித்த டேஷியா ஹார்கிரேவ், “ நான் வகுப்­பொன்றில் 20 மாணவர்கள் எனது கற்பித்தலை ஆரம்பித்தேன்.

தற்போது வகுப்பில் 29 மாண­வர்கள் உள்ளனர். ஆனால் எமது ஊதியம் அதிகரிக்கப்படவில்லை. ஆனால் நீங்கள் (பாடசாலை நிர்வாக சபை உறுப்பினர்கள்) எவ்வாறு அந்தப் பணத்தைப் பெறலாம்? இது எமது சட்டைப் பையி­லி­ருந்து பணத்தை எடுப்பதற்கு ஒப்பானதாகும்" என்று அவர் கூறினார்.

இதன்போது பாட சாலை காவல் உத்தியோகத்தர் ஒருவர் டேஷியா ஹார்கிரேவை நோக்கிச் செல்லவும் அவர் தனது பேச்சை நிறுத்தி விட்டு தனது இருக்கைக்கு திரும்ப எத்னிப்பதும் இந்நிலையில் அந்தக் காவல் உத்தியோகத்தர் அதனைப் பொருட்படுத்தாது அவரது கையைப் பற்றி வெளியே இழுத்துச் சென்று அவரை கீழே தள்ளிய பின்னர் அவருக்கு கைவிலங்கிட்டு அழைத்துச் செல்வதும் அந்தக் கட்டடத்திலுள்ள கண்காணிப்பு காணொளிப் புகைப்படக் கருவியில் படமாகியுள்ளது.

பாடசாலை நிர்வாக அதிகாரியால் முன்வைக்கப்பட்ட செயல்திறன் உடன்படிக்கை குறித்து கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் ஆசிரியர்களின் ஊதிய உயர்வு குறித்து உரையாடி குழப்பம் விளைவித்ததாக குற்றஞ்சாட்டியே டேஷியா ஹார்கிரேவ் பாடசாலை காவல் உத்தியோகத்தரால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

1492 total views