சிரியா நாட்டின் வடமேற்கு பகுதியில் ரஷியா விமானப்படை தாக்குதல்! 9 அப்பாவி பொதுமக்களுக்கு நேர்ந்த சோகம்

Report

சிரியா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் ரஷியா விமானப்படை இன்று நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 9 பேர் உயிரிழந்தனர்.

சிரியா நாட்டின் பல முக்கிய நகரங்களை முன்னர் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அரசுப்படைகள் நடத்திய ஆவேச தாக்குதலில் கொல்லப்பட்டனர். பலர் உயிர் பயத்தில் பாலைவனப் பகுதிகளை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.

அவர்களில் சிலர் யூப்ரெட்டஸ் நதிக்கரையோரம் அமைந்துள்ள புறநகர் பகுதிகளில் பதுங்கியுள்ளனர். அங்கிருந்தவாறு அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டுள்ள சிரியா ராணுவத்துக்கு உதவியாக ரஷியா நாட்டு விமானப்படைகளும் களத்தில் உள்ளன.

இந்நிலையில், அந்நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் அல்கொய்தா ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளின் மறைவிடங்களை குறிவைத்து ரஷியாவின் போர் விமானங்கள் இன்று நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 9 பேர் உயிரிழந்தனர்.

மேலும் பலர் காயமடைந்தனர் என சிரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1275 total views