இந்தியாவில் அதிவேகமாக பரவும் கொரோனா வைரஸ்... நம்பிக்கை அளித்த சீனா

Report

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சீனா உதவும் என்று அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை இந்தியாவில் 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைத் தொடர்பு கொண்டு, இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க சீனா உதவும் என்று நம்பிக்கை அளித்துள்ளார்.

மேலும் அவர், கொரோனா வைரஸை, சீன வைரஸ் என்று குறிப்பிடக்கூடாது, அது தங்கள் நாட்டுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறிய அவர், இந்தியா அத்தகைய குறுகிய மனப்பான்மையுடன் கொரோனா வைரஸை அணுகாது எனத் தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இந்தியா ஒருபோதும் அதை சீனா வைரஸ் எனக் குறிப்பிடாது என ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார். மேலும், ஒட்டுமொத்த உலகமும் ஒன்றாகப் போராட வேண்டிய காலகட்டம் இது என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இதற்கு முன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கொரோனா வைரஸை சீனா வைரஸ் என்று குறிப்பிட்டார். இதன் காரணமாக சில ஆங்கில ஊடகங்களும், இதை சீன வைரஸ் என்று குறிப்பிட்டன.

இதனால் இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்ததோடு,சீன வைரஸ் என குறிப்பிட்ட பலர் மீது வழக்கு தொடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் முதன்முதலாக கண்டிபிடிக்கப்பட்டது சீனாவில் இருக்கலாம். ஆனால், அது சீனாவிலிருந்து உருவான வைரஸ் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்ற பிரசாரத்தை சீனா தொடர்ந்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

2493 total views