சகோதரியை காண கண்ணீர் போராட்டம் நடத்திய பெண்மணி: பணிந்த அரசாங்கம்

Report

அவுஸ்திரேலியாவில் புற்றுநோய் காரணமாக மரணப்படுக்கையில் இருக்கும் சகோதரியை ஒரே ஒரு முறை காண அனுமதி கோரி அரசாங்கத்திடம் போராடிய பெண்மணிக்கு அனுமதி கிடைத்துள்ளது.

நியூசிலாந்திலிருந்து விமான பயணத்திற்கு அனுமதி கோரி கிறிஸ்டின் ஆர்ச்சர் என்பவரின் கோரிக்கையை அவுஸ்திரேலியா நிர்வாகம் நான்கு முறை நிராகரித்தது.

இந்த நிலையிலேயே இவரது நிலைமை ஊடகங்களின் பார்வையில் பட்டது. கிறிஸ்டின் ஆர்ச்சரின் ஒரே ஒரு சகோதரி கெயில் பேக்கருக்கு குணப்படுத்த முடியாத கருப்பை புற்றுநோய் இருப்பது கடந்த மார்ச் மாத இறுதியில் கண்டறியப்பட்டது.

இதனிடையே கொரோனா பரவல் உலக நாடுகளை மொத்தமாக நெருக்க, விமான சேவை உள்ளிட்ட எல்லைப் போக்குவரத்தை உலக நாடுகள் தடை செய்தன.

இதனால், நியூசிலாந்தில் வசித்துவந்த கிறிஸ்டின் ஆர்ச்சர் அவுஸ்திரேலியாவில் புற்றுநோய் சிகிச்சை எடுத்து வரும் தனது சகோதரியான கெயில் பேக்கரைப் பார்க்க முடியாமல் தவித்து வந்தார்.

தனது சகோதரியைச் சந்திப்பது தொடர்பாக 4 முறை விண்ணப்பித்தும், அதனை அவுஸ்திரேலிய அரசு நிராகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவரது கோரிக்கை ஊடகங்களில் வலம் வர, தற்போது தனது சகோதரியை ஆறு வருடங்களுக்குப் பிறகு சந்தித்திருக்கிறார் கிறிஸ்டின்.

சகோதரியைச் சந்திப்பதற்கு முன்னர் அவருக்கு கொரோனாவுக்கான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு அவர் ஒரு வாரம் ஹொட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டார்.

பொதுவாக சர்வதேச பயணிகளுக்கு இரண்டு வார காலம் தனிமைப்படுத்தல் கட்டாயம என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிறிஸ்டினுக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து குடும்ப உறுப்பினர்கள் அவரை சிட்னியில் இருந்து 300 மைல்கள் தொலைவில் இருக்கும் நியூ சவுத் வேல்ஸ் மாநில கடலோர நகரமான பவுரவில்லுக்கு அழைத்து சென்றனர்.

அங்கே அவர் தமது சகோதரியை நீண்ட ஆறு வருடங்களுக்கு பின்னர் சந்தித்துள்ளார்.

இது தொடர்பாக அவுஸ்திரேலியாவில் உள்ள தனியார் ஊடகத்தில் கிறிஸ்டின் பேசும்போது, நான் எதிர்கொண்டுள்ள உணர்வுகளை வெறும் வார்த்தைகளால் கூற முடியாது.

நான் இறுதியாக என் சகோதரியுடன் இருப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த இரண்டு வாரங்கள் எனது வாழ்க்கையிலேயே சந்தித்த கடுமையான நாட்கள்.

எனது மனுவை அவுஸ்திரேலிய அரசு நிராகரித்ததற்கு அவர்களுக்கு இரக்கம் இருக்குமா என்று நான் ஆச்சரியப்பட்டேன். அவர்கள் என்ன நினைத்தார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை.

எனது சகோதரியை நான் பார்க்க முடியாமல் போய்விடும் என்று நினைக்கவில்லை. அவ்வாறு நடந்திருந்தால் அது எனது வாழ்க்கையின் மிக மோசமான நிகழ்வாக இருந்திருக்கும் என்றார்.

2224 total views