கனடாவில் இறுக்கமடையும் இலங்கை இராணுவத்தின் எதிர்பார்ப்பு

Report
306Shares

கனடா, வான்கூவரில் இம்மாதம் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கும் ஐ.நா. அமைதி பேண் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான மாநாடு தொடர்பில் கனடிய மற்றும் சர்வதேச தமிழ் அமைப்புக்களின் கூட்டுக்குழுவின் செய்தியாளர் சந்திப்பொன்று நேற்றைய தினம் இடம்பெற்றது.

ஒட்டாவா நாடாளுமன்றத்தின் ஊடக கூடத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

2017 ஐக்கிய நாடுகள் அமைதிபேண் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் இலங்கை பாதுகாப்பு படை அதிகாரிகள் பங்கு கொள்வதைத் தடுப்பதற்காகவும் இழைக்கப்பட்ட சர்வதேச யுத்தக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதற்குமாக இந்த செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது.

இலங்கை அரசு சர்வதேச சட்டங்களை மீறியிருப்பதை எடுத்துக்காட்டி அதன் மூலம், நவம்பர் 14, 15ஆம் திகதிகளில் வான்கூவரில் நடைபெறவிருக்கும் ஐ.நா. அமைதி பேண் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில், கனடிய அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே குறித்த குழுவின் நோக்கமாகும்.

இலங்கையினால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச சட்ட மீறல் விடயங்களை முன்னிலைப்படுத்தவும், கனடிய அரசின் துரித செயற்பாட்டை வலியுறுத்தியும், அமைச்சர் ரால்ப் கூடேல் மற்றும் நீதி அமைச்சர் ஜோடி வில்சன் றேபோ ஆகியோருக்கு இக் கூட்டுக்குழு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

குறித்த கடிதத்தில் கனடிய அரசு உறுதியான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தின் 35(1) ம் பிரிவின் பிரகாரம் வான்கூவர் மாநாட்டில் இலங்கை படை அதிகாரிகள் கலந்து கொள்வதைத் தவிர்க்குமுகமாக அவர்களுக்கு கனடிய நுழைவு அனுமதி மறுக்கப்பட வேண்டும் என அமைச்சர் கூடேலுக்கு இக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதேவேளை மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் சட்டத்தின் பிரகாரம் உடனடியாக விசாரணைகள் தொடங்கப்பட வேண்டும் என அமைச்சர் வில்சன் றேபோவிடமும் இக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இக் கூட்டுக்குழுவில் பத்து கனடிய மற்றும் சர்வதேச தமிழ் அமைப்புக்கள் அங்கம் வகிக்கின்றதோடு, பிரபல கனடிய சட்ட நிறுவனமான நவா வில்சன் ஏல்.எல்.பி. இத் தமிழ் அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எனவும் குறித்த செய்தியாளர் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பில் குறித்த குழுவின் ஆலோசகரும், நவா-வில்சன் எல்.எல்.பி. சட்ட நிறுவனத்தின் மூத்த பங்குதாரர் மல்லிகா வில்சன் கருத்துத் தெரிவிக்கையில்,

சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டத்தை மீறியதற்காக சிறீலங்காவின் ஆயுதப்படைகளுக்கு எதிராக கண்டனத்துக்குரிய குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

குண்டுகளை விமானத்திலிருந்து மருத்துவமனைகள், பறப்பு தடுக்கப்பட்ட பகுதிகள், அப்பாவி குடிமக்கள் மீது வீசியதுடன், கற்பனை செய்து பார்க்க முடியாத பல செயல்களை தமது சொந்த மக்களுக்கு எதிராக செய்ததற்கான குற்றச்சாட்டுகளும் இலங்கையின் ஆயுதப்படையினர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

அவர்களின் இந்த சர்வதேச சட்ட மீறல்களைக் கண்ணால் கண்ட சாட்சியங்களாக கனடாவில் இன்று எம்மோடு வாழ்ந்து வரும் பலரும், இலங்கையின் ஆயுதப்படை அங்கத்தவர்கள் கனடிய மண்ணைச் சுதந்திரமாக மிதிப்பதையிட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இலங்கையின், ஆயுதப்படையினர் குடிமக்கள் நிலங்களை தொடர்ந்தும் ஆக்கிரமித்து வருகின்றனர் .

தமிழ் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் பாலியல் குற்றங்களும் அவர்களால் தொடரப்படுகின்றன.

இந்த உரிமை மீறல்களுக்கு பெருமளவிலான சான்றுகள் இருந்த போதிலும், இலங்கை அரசாங்கத்தின் தப்பிக்க விடும் கலாச்சாரம் ஆயுதப்படையினரைச் சட்டப்பூர்வமாகப் பாதுகாத்தும் வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

9613 total views