வித்தியா படுகொலை வழக்கில் விடுதலையானவருக்கு மீண்டும் விளக்கமறியல்!

Report
7Shares

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு, பிரிதொரு குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பூபாலசிங்கம் இந்திரகுமார் என்பவரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 22ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்கவும், அதுவரை இந்த வழக்கை ஒத்திவைக்கவும் ஊர்காவற்றுறை நீதவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகாலை வழக்கில் விசாரணைகளில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் முதலாவது சந்தேகநபரான புங்குடுதீவைச் சேர்ந்த பூபாலசிங்கம் இந்திரகுமார் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவருக்கு எதிரான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படும் போது, ஊர்காவற்றை பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் எதிரியான பூபாலசிங்கம் இந்திரகுமார் மீது பிறிதொரு வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணைகளின் போது குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னமும் நிறைவடையவில்லை என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, சந்தேகநபரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1039 total views