வீசா வகைகள் அவற்றுக்காக அறவிடப்படும் கட்டணங்களில் திருத்தம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை

Report
21Shares

தற்போது பயன்பாட்டிலுள்ள வீசா வகைகள் மற்றும் அவற்றுக்காக அறவிடப்படுகின்ற கட்டணங்களில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளரும் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் அபிவிருத்தி செயன்முறைக்காக தேசிய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக தற்போது நடைமுறையிலுள்ள வீசா வெளியிடும் செயன்முறையினை முறைப்படுத்தல் மற்றும் புதுப்பிப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தற்போது பயன்பாட்டிலுள்ள வீசா வகைகளுக்கு மற்றும் அவற்றுக்காக அறவிடப்படுகின்ற கட்டணங்களில் திருத்தம் செய்வதற்கும், தற்போது இலங்கை ரூபாவில் அறவிடப்படுகின்ற கட்டணத்தினை அமெரிக்க டொலர்களில் அறவிடுவதற்கும் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் சிபார்சுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் ,

• இலங்கை முதலீட்டு சபையின் கீழ் காணப்படுகின்ற துறைகளின் முதலீட்டாளர்கள்/ பணியாளர்களுக்கு உரிய குடியிருப்பு விசாக்களை சிபார்சு செய்யும் அதிகாரத்தினை முதலீட்டு சபை உரித்தாகும் அமைச்சின் செயலாளருக்கு வழங்குதல்.

• செல்லுபடியாகும் வீசா கால எல்லையினை கடந்த வெளிநாட்டவர்களின் வீசா கட்டணத்துக்கு மேலதிகமாக 500 அமெரிக்க டொலர்களை தண்டப்பணமாக அறவிடல்.

• வெளிநாட்டு மாணவர்களுக்காக முழுமையான கல்வி நடவடிக்கை கால எல்லைக்காக குடியிருப்பு விசாக்களை வழங்குதல்.

• இலங்கையில் 500,000 அமெரிக்க டொலர்கள் நிதியினை முதலிடுகின்ற வெளிநாட்டவர்களுக்கு 10 வருட கால எல்லைக்காக குடியிருப்பு விசாக்களை வெளியிடல்.

• இலங்கை பிரஜையொருவர் மற்றும் விவாகமான வெளிநாட்டு வாழ்க்கை துணைக்காக 05 வருட காலத்துக்காக வாழ்க்கை துணை வீசா மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கும் வீசாவினை பெற்றுக் கொடுத்தல்.

• தனது இலங்கை வாழ்க்கை துணை மரணமடைந்த வெளிநாட்டு துணைக்காக மற்றும், இலங்கையினுள் 10 வருட காலம் தொடர்ந்து வசித்து வருகின்ற அல்லது 18 வயதுக்கு குறைந்த குழந்தைகள் உள்ள வெளிநாட்டு வாழ்க்கை துணைக்காக தொழில் ஈடுபடுவதற்காக 02 வருட காலத்துக்கு குடியிருப்பு விசாக்களை பெற்றுக் கொள்ளல்.

• இரட்டை பிரஜா உரிமைக்காக விண்ணப்பிக்க தகைமையற்ற, தற்போது வெளிநாடொன்றில் பிரஜாவுரிமை பெற்றுள்ள, இலங்கையர்களாக காணப்படுகின்ற நபர்களுக்கு நிரந்தர குடியிருப்பு விசாவினை பெற்றுக் கொடுத்தல்.

மேற்குறிப்பிட்ட யோசனைகளை வீசா வெளியிடும் செயன்முறைக்கு உள்வாங்கி 1948ம் ஆண்டு 20ம் இலக்க குடிவரவு – குடியகழ்வு சட்டத்தின் 14ம் உறுப்புரை மற்றும் அதற்கான நிபந்தனைகளை பொருத்தமான முறையில் திருத்தம் செய்வது தொடர்பில் உள்நாட்டலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

1849 total views