மோடி அரசு பதவிக்கு வந்த பின்னரே இந்தியாவுடனான உறவுகளில் விரிசல் – மகிந்த

Report

2014ஆம் ஆண்டு புதுடெல்லியில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரே, இருதரப்பு உறவுகளில் பெரிய விரிசல் ஏற்பட்டது என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பெங்களூரு நகரில் நேற்று நடந்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து குழுமத்தின் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்வில், இந்திய- சிறிலங்கா உறவுகளின் எதிர்காலம் என்ற தொனிப்பொருளில், உரையாற்றிய அவர்,

“இந்திய- சிறிலங்கா உறவுகள் எப்போதும் சுமுகமானதாக இருந்ததில்லை.

1980களில் முதல் முறையாகவும்,, 2014இல் இரண்டாவது முறையாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் பிரச்சினையை எதிர்கொண்டன.

2014ஆம் ஆண்டு புதுடெல்லியில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரே, இருதரப்பு உறவுகளில் பெரிய விரிசல் ஏற்பட்டது.

ஆனால், எனது தலைமையிலான எதிரணி இப்போது, இந்தியாவின் ஆளும் கட்சியுடன் நல்ல புரிந்துணர்வைக் கொண்டிருக்கிறது.

இரண்டு நாடுகளுக்கும் இடையில், தவறான புரிந்துணர்வுகளைத் தவிர்ப்பதை உறுதிப்படுத்த ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும்.

எனது ஆட்சிக்காலத்தில் இரண்டு நாடுகளினதும் உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட மூவரணியைப் போன்ற பொறிமுறையை இரு நாடுகளும் மீண்டும் உருவாக்கி, தவறான புரிந்துணர்வுகளைக் களைய வேண்டும்.

மற்ற நாட்டினது நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய குழுக்கள், தமது பிராந்தியத்தைப் பயன்படுத்தவில்லை என்பதை, இந்தியாவும் சிறிலங்காவும் உறுதிப்படுத்த வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1516 total views