அமெரிக்க கிரீன் கார்டுக்கான உச்சவரம்பு நீங்குகிறது

Report

அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி பணி புரிய விரும்புகிற பிற நாட்டினருக்கு ‘கிரீன் கார்டு’ வழங்கப்படுகிறது.

அங்கு 3 ஆண்டு காலம் தங்கி வேலை செய்ய விரும்புகிற வெளிநாட்டினருக்கு ‘எச்-1பி’ விசா தரப்படுகிறது. இந்த விசா மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கத்தக்கது.

‘எச்-1பி’ விசாதாரர்களில் மிகவும் திறமையும், தகுதியும் வாய்ந்த 7 சதவீதம் பேருக்குத்தான் நிரந்தரமாக தங்கி வேலை செய்ய வசதியாக ‘கிரீன் கார்டு’ தரப்படுகிறது. அதுவும் விண்ணப்ப மூப்பு அடிப்படையில் தரப்படுவதால், ‘கிரீன் கார்டு’க்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

இதனால் ‘எச்-1பி’ விசாவில் செல்கிற தகவல் தொழில் நுட்பத்துறையினர், மிகவும் திறமைபடைத்த பிற துறையினர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இந்த நிலையில் ‘கிரீன் கார்டு’ வழங்குவதற்கு உள்ள 7 சதவீத உச்சவரம்பை நீக்கி, 15 சதவீதமாக உயர்த்துவதற்கு வகை செய்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா மீது நேற்று முன்தினம் அங்கு ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஓட்டெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 365 எம்.பி.க்கள் ஓட்டு போட்டனர். எதிராக 65 ஓட்டுகள் மட்டுமே விழுந்தன. பெரும்பான்மையானோர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் மசோதா நிறைவேறியது.

இந்த மசோதா அடுத்து செனட் சபையில் நிறைவேற வேண்டும்.

அங்கு குடியரசு கட்சியினருக்கு பெரும்பான்மை பலம் உள்ளதால் மசோதா நிறைவேறுவதில் சிக்கல் இருக்காது.

அதன்பின்னர் ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட வேண்டும். அவர் கையெழுத்து போட்டு விட்டால் மசோதா சட்டமாகி நடைமுறைக்கு வந்துவிடும்.

இந்த சட்டம், அமெரிக்காவில் ‘கிரீன் கார்டு’க்காக பல்லாண்டு காலமாக காத்திருக்கிற இந்திய தகவல் தொழில் நுட்பத்துறையினர் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு வரப்பிரசாதமாக அமையும்

2060 total views