இலங்கை மாணவரை மாட்டிவிட்ட விவகாரம் குற்றத்தை ஒப்புக்கொண்ட நபர்

Report

இலங்கை மாணவர் நிஸாம்தீனை பயங்கரவாத குற்றச்சாட்டில் மாட்டிவிட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட அவுஸ்திரேலியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவுஜாவின் சகோதரர் Arsalan Khawaja தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனை அடுத்து, அவருக்கு எதிரான வழக்கு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விவகாரமொன்றில் இலங்கை மாணவர் நிஸாம்தீனை பயங்கரவாத குற்றச்சாட்டில் மாட்டிவிடுவதற்காக போலி ஆதாரங்களை புனைந்து நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக அலுவலகத்தில் தடயங்களாக வைத்துவிட்டதன் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் நிஸாம்தீன் கைது செய்யப்பட்டு, ஒரு மாதகாலமாக விசாரிக்கப்பட்டு பின்னர், அவருக்கு எதிரான வழக்கு மீளப்பெறப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

அதன்பின்னர், இந்த வழக்கின் பிரதான சூத்திரதாரி என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட Arsalan Khawaja, பூர்வாங்க விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

விடுவிக்கப்பட்டவர் எதிர்த்தரப்பு சாட்சியங்களுடன் தொடர்புகொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டாவது தடவை கைது செய்யப்பட்டார்.

கடந்த வாரம் சிட்னி பரமட்டா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது Arsalan Khawaja தனது குற்றங்களை ஒப்புக்கொண்டதையடுத்து, எதிர்வரும் நவம்பர் மாதம் 29 ம் திகதி தண்டனை அறிவிப்புக்காக நீதிமன்ற நாள் குறிக்கப்பட்டுள்ளது.

564 total views