சோகத்தில் பிரித்தானிய வர்த்தகர்கள் - இனி பேச்சுவார்த்தை நடத்தப்படாது: ஐரோப்பிய ஒன்றியம்

Report

உடன்பாடற்ற பிரெக்ஸிற் இடம்பெறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதால் பிரித்தானிய வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய வெளியேறுவது தொடர்பாக கொண்டு வரப்பட்ட பிரெக்ஸிற் வாக்கெடுப்பு இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்துள்ள நிலையில் வர்த்தகர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

”வர்த்தகம், விற்பனை போன்ற பல விடயங்களை கவனத்தில் கொண்டு பிரெக்ஸிற் தொடர்பான முடிவுகள் எட்டப்பட வேண்டும். இல்லையெனில் பிரித்தானிய அரசு மீது பிரித்தானியர்கள் அதிருப்தி அடைவார்கள். நான் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களுடன் வர்த்தகம் மேற்கொண்டு வருகின்றேன். இந்நிலையில் உடன்பாடற்ற பிரெக்ஸிற் இடம்பெற்றால் பெரிதும் பாதிக்கப்படுவேன் என பிரித்தானிய நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரித்தானியாவில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பலரும் தமது எதிர்காலம் குறித்து கவலை அடைந்துள்ளனர். பிரெக்ஸிற்றினால் முன்னெப்போதும் இல்லாத அளவில் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

உடன்பாடற்ற பிரெக்ஸிற் இடம்பெறுமானால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவுக்கு பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் எழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பொருட்களின் விலை அதிகாரிக்குமென பிரித்தானிய வங்கிகள் எச்சரித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இறக்குமதி கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருப்பதால் 5 முதல் 10 வீதமாக கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மார்ச் 29 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தமின்றி வெளியேறுவது தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று வாக்களிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கு பிரித்தானிய நாடாளுமன்றம் எதிர்ப்பு!

பிரெக்ஸிற்றுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற வாக்கெடுப்பின்போது பிரதமர் தெரேசா மே-யின் திருத்தப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் 149 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற உடன்பாடற்ற பிரெக்ஸிற் மீதான வாக்கெடுப்பின்போது நான்கு வாக்குகள் வித்தியாசத்தில் உடன்பாடற்ற பிரெக்ஸிற் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய வாக்கெடுப்பில் உடன்பாடற்ற பிரெக்சிற்றுக்கு ஆதரவாக 308 உறுப்பினர்களும் எதிராக 312 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

மீண்டுமொரு முறை உடன்பாடற்ற பிரெக்ஸிற் வாக்கெடுப்புக்கு உள்ளானபோது ஆதரவாக 278 உறுப்பினர்களும் எதிராக 321 உறுப்பினர்களும் வாக்களித்த காரணத்தால் உடன்பாடற்ற பிரெக்ஸிற் 43 வாக்குகளால் மீண்டும் தோற்கடிக்கப்பட்டது.

இந்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக பிரெக்ஸிற்றை பிற்போடுவது தொடர்பான வாக்கெடுப்பு இன்றையதினம் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

பிரித்தானியாவுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தப்படாது: ஐரோப்பிய ஒன்றியம் உறுதி

பிரெக்ஸிற் தொடர்பாக பிரித்தானியாவுடன் இனி எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இக்கருத்து உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.

நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற வாக்கெடுப்பின்போது பிரதமர் தெரேசா மே-யின் திருத்தப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டதையடுத்தே ஐரோப்பிய ஒன்றியம் இக்கருத்தை வெளியிட்டுள்ளது.

பிரெக்ஸிற் ஒப்பந்தமொன்றை ஈட்டுவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் தம்மால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது என ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்ஸிற் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் மைக்கேல் பர்னியர் தெரிவித்துள்ளார்.

பிரெக்ஸிற் தொடர்பாக நிலவும் முட்டுக்கட்டையை முறியடிப்பதற்கு பிரித்தானியாவால் மாத்திரமே முடியுமெனவும் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான தமது தயார்ப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னரைவிட இப்போது முக்கியமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் ரஸ்க் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் ஒருங்கிணைந்த அறிக்கையிலும் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை அடைவதற்காக தம்மால் இயன்ற அனைத்தையும் தாம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

15803 total views