செப்டம்பர் 11 - அமெரிக்காவின் கரிநாள்

Report

இருபத்தோராம் நூற்றாண்டின் மோசமான தாக்குதல் என கருதப்படும், அமெரிக்காவின் இரட்டைகோபுரம் தகர்க்கப்பட்டு இன்றுடன் 19 ஆண்டுகளாகியும், அதன் வடுக்கள் மாறாமல் உள்ளன.

கடந்த 2001 செப்டம்பர் 11ம் நாளில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத நியூயார்க் நகரின் காலைப் பொழுதில் கற்பனையில் கூட இப்படி ஒரு சம்பவம் நடைபெறும் என யாரும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.

110 மாடிகளைக் கொண்ட உலக வர்த்தக மையக் கட்டடத்தில் திடீரென விமானம் ஒன்று மோதி நொறுங்கியது.

அதிர்ச்சியுடன் மக்கள் விபத்து என நினைத்துக் கொண்டிருந்த போது அடுத்த கட்டடத்திலும் மற்றொரு விமானம் மோதிச் சிதறியது.

அப்போதுதான் தெரிந்தது பயங்கரவாதிகளின் தேர்ந்த சதி இது என்று. கட்டடம் ஒருபுறம் பற்றி எரிய, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மாடிகளில் இருந்தவர்கள் குதித்து இறந்தது பெரிய சோகம்.

தாக்கியது யார்? என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள் அமெரிக்க பாதுகாப்புத்துறை மையமான பென்டகனும் தாக்குதலுக்குள்ளானது.

ஆற அமர யோசிக்க முடியாத சூழலில் மற்றொரு விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதாக வந்த தகவலால் நொறுங்கிப் போனார்கள் அமெரிக்க மக்கள்.

3000 பேரைப் பலி கொண்ட இந்தத் தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

சுதாரித்துக் கொண்ட அமெரிக்கா உடனடியாக விசாரணையில் இறங்க தீவிரவாதி பின்லேடனின் பயங்கரவாதத் திட்டம் என்பது தெரியவந்தது.

இத்தனை கொடூரத்திற்கு பின்னர் தீவிரவாதத்தின் கோரத்தை புரிந்து கொண்ட அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் முழுமூச்சாக இறங்கியது.

இந்நிலையில் பின்லேடன் அழிக்கப்பட்டாலும், இன்னும் மதம் என்ற முகமூடியை மாட்டிக் கொண்டு தீவிரவாதம் ஆங்காங்கே தலைகாட்டிக் கொண்டுதான்இருக்கிறது.

3782 total views