கொரோனாவால் செய்வதறியாது திகைத்து நிற்கும் அமெரிக்கா - 11 000 ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை

Report

உலகை உலுக்கும் கொடிய கொரோனாவால் நாளுக்குநாள் அமெரிக்காவில் நோய்த்தொற்றும் மரணங்களும் அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில் திங்களன்று மட்டும் அங்கு 36,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பலி எண்ணிக்கை 10,923 என்று 11,000-த்தை நெருங்கும் அபாயத்தில் உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார சீரழிவிற்கு அமெரிக்காவில் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு அடுத்ததாக இத்தாலி 16,523 மரணங்களுடனும் ஸ்பெயின் 13,341 மரணங்களுடனும் அடுத்த நிலையில் பெரிய ஆபத்தைச் சந்தித்து வருகின்றன.

அத்துடன் நியூயார்க்கில் மட்டும் 4,750 பேர் மரணமடைந்துள்ள நிலையில் அங்கு சுமார் 1,30,000 கொரோனா வைரஸ் கேஸ்கள் உள்ளன.

இதனையடுத்து பள்ளிகள், அத்தியாவசியமில்லாத வர்த்தகங்கள் மேலும் 3 வாரங்களுக்கு ஷட் டவுனில் இருக்க கவர்னர் ஆண்ட்ரூ கியுமோ உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் சமூக விலகல் முறை நம்பிக்கை அளிக்கிறது, ஆனால் அதுதான் தீர்வா என்பதில் தெளிவில்லை. கேஸ்கள் குறைவதற்குக் காரணம் தொற்று விகிதம் குறைவதே. இருப்பினும் சமூக விலகல் கொரோனா விகிதத்தைக் குறைக்கிறது, என்றார் கவர்னர் கியூமோ.

உலகம் முழுதும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 75,000 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் 1 லட்சம் முதல் 2,40,000 பேர் வரை மரணிக்கலாம் என கூறப்படுகின்றது.

இதேவேளை ஆளும் குடியரசுக் கட்சியின் கவர்னர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் 9 மாகாணங்களில் அமெரிக்காவில் இன்னும் முழு லாக்-டவுன் உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை. இது பொதுச் சுகாதார நிபுணர்களை வெறுப்படையச் செய்துள்ளது.

அத்துடன் நியூயார்க் போன்ற வைரஸ் ஹாட்ஸ்பாட்களில் பாதுகாப்பு கவசங்கள், வெண்டிலேட்டர்கள், மருத்துவ உபகரணங்கள் குறைபாடு ஏற்பட்டுள்ளது.

எனினும் வாஷிங்டன், கலிபோர்னியாவில் அனைத்து வசதிகளும் உள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில் வாஷிங்டனில் நோய்த்தொற்று குறைந்திருப்பதோடு அங்கிருந்து நியூயார்க்கிற்கு 400 காற்றோட்ட இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

4665 total views