கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்காக அதிபர் பைடன் எடுத்த முக்கிய முடிவு

Report
0Shares

அமெரிக்காவில் மட்டும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி 5 லட்சம் பேர் பலியான நிலையில், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முக்கிய முடிவினை ஜனாதிபதி பைடன் அறிவித்துள்ளார் .

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று, உலக நாடுகளை மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்துள்ளது. பல நாடுகளில் உருமாற்றம் கண்ட புதிய வீரியம் மிக்க கொரோனா தொற்றால், பாதிப்பு எண்ணிக்கை பலமடங்காக உயர்ந்து வருகிறது.

இதனிடையே கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, முதன்மை நாடுகள் சில கட்டம் கட்டமாக பொதுமக்களுக்கு அளித்து வருகிறது.

இருப்பினும் உலகின் பல ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி அடுத்த ஆண்டில் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையும் உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள் எண்ணிக்கை 63,090,634 என தெரிய வந்துள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28,222,180 என தெரிய வந்துள்ளது.

கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 501,091 என தகவல் வெளியான நிலையில், வெள்ளைமாளிகை உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் அடுத்த 5 நாட்கள் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

கொரோனாவால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

182 total views