இப்போது தேர்தல் வைத்தால் வெற்றி பெறுவாரா அமெரிக்க அதிபர் டிரம்ப்?

Report
16Shares

டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று நவம்பர் 8-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. அவர் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் முடிவு வெளியான இந்தப் 12 மாதங்களை 'சுமூகமான' எனும் சொல்லைத் தவிர வேறு எந்த சொல்லைக் கொண்டு வேண்டுமானாலும் விவரிக்கலாம்.

அவர் அதிபரான இந்த ஓராண்டில் பதவி நீக்கங்கள், விளையாட்டு வீரர்களுடன் டிரம்பின் மோதல், வட கொரியாவுடன் வார்த்தைப் போர் என பலவும் நிகழ்ந்துள்ளன.

மக்களிடையே அவரது மதிப்பு சரிந்துள்ளது. அவரது தேர்தல் வெற்றியையே ஒரு சிறப்புக் குழு விசாரணை செய்து வருகிறது.

ஆனால், பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிகரித்துள்ள எல்லை பாதுகாப்பு ஆகியன, அரசியலுடன் தொடர்பில்லாத அவரை அதிபராக்கியது சரிதான் என்று நிரூபணம் செய்கிறது என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை விடவும் சுமார் 30 லட்சம் வாக்குகள் குறைவாகப் பெற்றிருந்தாலும் அதிக இடங்களில் குடியரசு கட்சி வேட்பாளர்கள் வென்றதால், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் டிரம்ப். தற்போது தேர்தல் நடந்தால் அவரது வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?

தீர்ப்பு 1: தற்போது சிக்கலில் உள்ளார் டிரம்ப்

தனது தேர்தல் வெற்றிக்குப் பிறகு, 2016-இல் டிரம்பின் வெற்றி உள்பட தொடர்ந்து ஒன்பது அதிபர் தேர்தல் முடிவுகளை சரியாகக் கணித்த அமெரிக்கன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆலன் லிட்ச்மேனுக்கு, அவரின் கணிப்பு செய்தியாக வெளியாகியிருந்த 'தி வாஷிங்டன் போஸ்ட்' இதழின் பிரதி ஒன்றில் வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார் டிரம்ப்.

தற்போது இந்தக் 'கற்பனையான' இடைக் காலத் தேர்தலை நடத்துவது மிகவும் கடினம் என்றும், அப்படி நடந்தாலும் டிரம்பின் தேர்தல் தோல்வியை கணிக்கப் போதுமான எதிர்மறைக் காரணிகள் உள்ளதாகவும் பேராசிரியர் ஆலன் கூறுகிறார்.

முன்னாள் அதிபரும் தனது கணவருமான பில் கிளிண்டனுடன் ஹிலாரி கிளிண்டன் - Getty Images

பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தாலும், அதிபர் மற்றும் அவரைச் சுற்றியுள்ளவர்கள் மீதான புகார்கள், குறிப்பிடத்தகுந்த சாதனைகள் எதுவும் இல்லாதது ஆகியன அதிபருக்கு எதிராக உள்ளதாக அவர் கூறுகிறார்.

டிரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்தால் பதவிக்காலம் முடியும் முன்னரே நீக்கம் செய்யப்படுவார் என்று கணித்து தான் எழுதிய புத்தகத்தில் கூறியுள்ள கருத்தில் தான் இன்னும் உறுதியாக இருப்பதாகவும் கூறுகிறார் பேராசிரியர் ஆலன் லிட்ச்மேன்.

தீர்ப்பு 2: ஹிலாரி கிளிண்டனை டிரம்ப் வெல்வார், ஆனால் பிற ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களை?

அட்லாண்டாவில் உள்ள 'தி ட்ரஃபல்கர் குரூப்' எனும் சிறிய தேர்தல் கணிப்பு நிறுவனம், டிரம்ப் வெற்றிபெறுவார் என்பதை மட்டும் கணிக்காமல், வெற்றி வித்தியாசத்தையும் சரியாகக் கணித்தது.

ஹிலாரியுடன் தேர்தல் களத்தில் மோதினால் டிரம்ப் தற்போது வெற்றி பெறுவார். ஆனால், ஜனநாயக கட்சியின் வேறு வேட்பாளருடன் மோதினால் தோல்வியடையலாம் என்கிறார் அந்த நிறுவனத்தின் மூத்த உத்தியாளர் ராபர்ட் காலே.

தீர்ப்பு 3: மீண்டும் டிரம்ப் வெல்லவும் வாய்ப்புண்டு

இந்த ஆண்டு ஜனவரி 20-இல் டிரம்ப் அதிபராகப் பதவியேற்றபின் டிரம்பின் செயல்பாடுகளை எந்த அளவு ஆதரிக்கிறீர்கள் என்று கேலப் செய்தி நிறுவனம் மக்களிடம் நடத்திய வாக்கெடுப்புகளில் அவருக்கு பெரிய அளவில் ஒன்றும் ஆதரவு இல்லை.

ஜூன் மாதம் 40% ஆக இருந்த ஆதரவு, அக்டோபர் 29 அன்று 33% ஆக குறைந்துள்ளது.

"2016-இல் தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளிலும் அவருக்கு மக்களின் ஆதரவு அதிகமாக இல்லை. ஆனால், அவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். அதனால், இப்போது தேர்தல் நடந்தாலும் அவர் வெற்றி பெற மாட்டார் என்று கூற முடியாது," என்கிறார் கேலப்பின் தலைமை ஆசிரியர் ஃபிராங்க் நியூபோர்ட்.

தீர்ப்பு 4: டிரம்ப்பை வெல்ல ஜனநாயகக் கட்சியினருக்கு தனித்துவமான ஒருவர் தேவை

நியூயார்க்கில் உள்ள ஸ்டோனி புரூக் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் பேராசிரியர் ஹெல்முட் நார்போத்தும் ஹிலாரியை எதிர்த்து போட்டியிட்டால் மீண்டும் டிரம்ப் வெற்றி பெறுவார் என்கிறார்.

"பில் கிளிண்டன், பராக் ஒபாமா போன்ற தனித்துவம் மிக்க வேட்பாளார்களால்தான் டிரம்ப்பை வெல்ல முடியும்," என்று அவர் கூறுகிறார்.

"ஜனநாயகக் கட்சிக்கு அப்படிப்பட்ட வேட்பாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் கிடைப்பதில்லை. தற்போதைய சூழலில் அவர்களை போல வசீகரம் உள்ள வேட்பாளர்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லை," என்கிறார் நார்போத்.

தீர்ப்பு 5: டிரம்ப் ஹிலாரியை வெல்லலாம், ஜோ பைடனை வெல்ல முடியாது

ஒபாமா அதிபராக இருந்தபோது, துணை அதிபராக இருந்த ஜோ பைடன் டிரம்ப்பை வெல்வார் என்கிறார் பேராசிரியர் பார்பரா பெர்ரி.

"நாளையே டிரம்ப்க்கு எதிராக ஜோ பைடனை நிறுத்தினால்கூட பைடன் வெல்வார்," என்கிறார் வர்ஜினியா பல்கலைக்கழகத்தில் அதிபர் பதவி குறித்து கற்பிக்கும் பெர்ரி.

2020-இல் பைடனுக்கு 77 வயதாகும், அப்போது மீண்டும் ஹிலாரி அதிபர் தேர்தலில் போட்டியிட்டால் அப்போதும் டிரம்ப்தான் வெல்வார் என்கிறார் இவர்.

தீர்ப்பு 6: ஜனநாயக கட்சியினர் வித்யாசமாக சிந்திக்க வேண்டும்

கடந்த ஆண்டு நடந்த தேர்தலுக்கு முன்பு, பேடி பவர் எனும் அயர்லாந்து நாட்டு பந்தய நிறுவனம், ஹிலாரிதான் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று கணித்து, பந்தயம் கட்டியவர்களுக்கு 4.5 மில்லியன் டாலர் பணம் செலுத்தியது.

டிரம்ப் வெற்றி பெற்றதால் அந்தப் பணம் அனைத்தையும் அவர்கள் இழக்க வேண்டியதாயிற்று. "தேர்தல் நாளன்று 20% வெற்றி வாய்ப்புடனேயே இருந்தார். நாளையோ அடுத்த வாரமோ மீண்டும் பந்தயம் கட்ட நேர்ந்தால், இருவர் மீதும் கிட்டத்தட்ட சம அளவிலேயே பந்தயம் காட்ட வேண்டியிருக்கலாம்," என்கிறார் அந்நிறுவனத்தின் ஜோ லீ.

ஆனால், தற்போது அத்தேர்தல் நடந்தால் டிரம்ப் மீது தான் பந்தயத் தொகையை செலவழிப்போம் என்கிறார் அவர்.

1611 total views