செளதியில் உள்ள லெபனான் பிரதமரின் நிலை என்ன ஆனது?

Report
200Shares

செளதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இருந்து பதவி விலகலை அறிவித்த தங்கள் நாட்டுப் பிரதமர் சாத் ஹரிரியின் தற்போதைய நிலை குறித்து தெளிவுபடுத்துமாறு செளதியிடம் லெபனான் அதிபர் மைக்கேல் அவுன் கேட்டுள்ளார்.

லெபனான் பிரதமர் சாத் ஹரிரி ஒரு வாரத்திற்கு முன்பு அறிவித்த திடீர் பதவி விலகலை அந்நாட்டு அதிபர் மைக்கேல் அவுன் ஏற்றுக்கொள்ளவில்லை.

சாத் ஹரிரியை செளதி சிறைபிடித்து வைத்திருப்பதாக இரானும், அதன் லெபனான் கூட்டாளியுமான ஹெஸ்புல்லா அமைப்பும் குற்றஞ்சாட்டியுள்ளது.

தங்களின் மோதலுக்கு லெபனானை களமான பயன்படுத்த கூடாது என மற்ற நாடுகளை அமெரிக்க எச்சரித்துள்ளது.

அரபு பிராந்தியத்தில் ஷியா முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட இரானுக்கும், சுன்னி முஸ்லிம்களைக் கொண்ட செளதி அரேபியாவுக்கும் இடையிலான பதற்றங்களில் லெபனான் களமாக பயன்படுத்தப்படுகிறது என கவலைகள் அதிகரித்துள்ளன.

சுன்னி முஸ்லிம் தலைவரும், தொழிலதிபருமான சாத் ஹரிரி லெபனானில் ஆட்சி அமைக்க, அதிபர் மைக்கேல் அவுனால் நவம்பர் மாதம் 2016-ம் அண்டு பரிந்துரைக்கப்பட்டார்.

கடந்த 4-ம் தேதி சாத் ஹரிரி பதவி விலகியது, இப்பிராந்தியத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

''பிரதமர் சாத் ஹரிரி ஒரு வாரத்திற்கு முன்பு பதவி விலகலை அறிவித்ததில் இருந்து, அவரது நிலை என்ன என்பது தெளிவற்றதாக இருக்கிறது. அதனால், அவரது நிலையும் செயல்களும் உண்மையை பிரதிபலிப்பதாக்க இல்லை'' என அதிபர் மைக்கேல் அவுன் கூறியுள்ளார்.

பிரதமர் சாத் ஹரிரி கடத்தி செல்லப்பட்டதாக வெளிநாட்டுத் தூதர்கள் குழுவிடம் அதிபர் மைக்கேல் அவுன் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தனது பெயரை வெளிப்படுத்தாத ஒரு மூத்த லெபனான் அதிகாரி கூறியுள்ளார்.இருந்தாலும், அதிபரின் இக்கருத்துக்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

ரியாத்தில் இருந்து ஒளிபரப்பான தொலைக்காட்சி ஒன்றில் தோன்றிய லெபனான் பிரதமராக இருந்த சாத் ஹரிரி, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறினார்.

லெபனானை கைப்பற்றுவதாகவும், இப்பிராந்தியத்தில் ஸ்திரமற்ற நிலைமையை உருவாக்குவதாவும் இரானையும், ஹெஸ்புல்லா அமைப்பையும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்சாத் ஹரிரி சுதந்திரமாக இருப்பதாக தனக்கு உத்திரவாதங்கள் அளிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். மேலும், சாத் ஹரிரி லெபனான் திரும்ப வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

வியாழக்கிழமையன்று, பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங், சௌதி அரேபியாவுக்கு முன்கூடியே திட்டமிடப்படாத திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டார். லெபனானின் ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவத்தை செளதியிடம் அவர் வலியுறுத்தினார். அத்துடன் சனிக்கிழமையன்று சாத் ஹரிரியுடன் தொலைப்பேசியில் அவர் பேசினார்.

இந்நிலையில், செளதி அரேபியா லெபனான் நாட்டுக்கு எதிராகப் போரை அறிவித்துள்ளதாக லெபனானின் பலம் வாய்ந்த ஹெஸ்புல்லா ஷியா அமைப்பு தலைவர் ஹசன் நஸ்ரல்லா குற்றஞ்சாட்டியுள்ளார்.

6725 total views