ஒடிசாவில் ‘ஆகாஷ்’ ஏவுகணை சோதனை வெற்றி

Report
7Shares

ஒடிசா மாநிலம் பலசோர் அருகே சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில், ‘ஆகாஷ்’ சூப்பர்சானிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. இது, தரையில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை தாக்கவல்லது. அதனால், ஆளில்லாத குட்டி விமானத்தை வானில் இலக்காக வைத்து, ஏவுகணை செலுத்தப்பட்டது.

அது வெற்றிகரமாக குட்டி விமானத்தை தாக்கியது. கடலோரத்தில் நிறுவப்பட்டிருந்த ராடார்கள், தட்பவெப்பத்தை கணிக்கும் சாதனங்கள் ஆகியவை ஆகாஷ் ஏவுகணையின் பாகங்கள் சிறப்பாக இயங்குவதை கண்காணித்தன.

இந்த சோதனையை நேரில் பார்த்த ராணுவ மந்திரியின் அறிவியல் ஆலோசகர் சதீஷ் ரெட்டி, விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். ஆகாஷ் ஏவுகணை, இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படுகிறது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டி.ஆர்.டி.ஓ.) இது முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது ஆகும். 25 கி.மீ. தூரம்வரை வானில் உள்ள இலக்கை தாக்கக்கூடியது. தானியங்கி வகையை சேர்ந்த இந்த ஏவுகணை, ஒரே நேரத்தில் பல திசைகளிலும் சுழன்று வானில் உள்ள பல்வேறு இலக்குகளை தாக்கும். இதில், 55 கி.மீ. எடை கொண்ட ஆயுதங்களை பொருத்தி அனுப்பலாம். போர் விமானம், குரூஸ் ஏவுகணை, பாலிஸ்டிக் ஏவுகணை போன்றவற்றை முறியடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

714 total views