மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி இஸ்ரேல் சாதனை

Report
11Shares

இஸ்ரேல் நாட்டில் இதுவரை இல்லாத அளவு மிகச் சிறிய தக்காளியை, அந்நாட்டு விவசாய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

தண்ணீர் வசதி மிக குறைவாக உள்ள இஸ்ரேல், விவசாயத்தில் புதிய யுக்திகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் விவசாய உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியில் அந்நாடு சிறந்து விளங்குகிறது. குறிப்பாக, காய்கறிகள் மற்றும் பழங்களை நவீன சாகுபடியில் விளைவித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தக்காளியை மிக சிறிய வடிவியில் அந்நாடு ஏற்கெனவே உருவாக்கியுள்ளது. செர்ரி தக்காளி என அழைக்கப்படும் இந்த தக்காளி அதிக சிவப்பு நிறத்துடன், சிறியதாக இருக்கும். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த வகை செர்ரி தக்காளிகள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன.

இந்நிலையில் இஸ்ரேலைச் சேர்ந்த விவசாய ஆராய்ச்சி நிறுவனமான கேடமாக, இதுவரை இல்லாத அளவு மிகச் சிறிய அளவிலான செர்ரி தக்காளியை உருவாக்கியுள்ளது. தண்ணீர் துளி அளவு கொண்ட இந்த தக்காளி, பார்ப்பதற்கு மிக அழகாகவும், சிவப்பு நிறத்துடனும் காட்சி அளிக்கிறது. இந்த தக்காளிகள் தற்போது அந்நாட்டின் உணவகளில் இடம் பிடிக்கத் தொடங்கியுள்ளன.

கேடமா நிறுவனத்தின் நிர்வாகி ஏரியல் கிட்ரோன் கூறியதாவது:

''தக்காளியை சமைக்காமல் சாப்பிட ஏதுவாக இந்த வகை சிறிய தக்காளி உருவாக்கப்பட்டுள்ளது. வாயில் போட்டுக்கொள்ள ஏதுவான அளவில் இது உள்ளது. மேலும், இந்த தக்காளியின் வாயில் வைத்து கடிக்க ஏதுவாக சிறிதாக இருப்பதால் அதனுள் இருக்கும் சாறு வீணாகாது. தக்காளி சாலெட் சாப்பிடுபவர்களுக்கு இது வசதியாக இருக்கும்'' எனக் கூறினார்.

இந்த சிறிய ரக தக்காளிகள், சிவப்பு நிறத்தில் மட்டுமின்றி மஞ்சள் உட்பட பிற நிறங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலில் இந்த மாதம் நடைபெறும் விவசாயக் கண்காட்சியில் இந்த புதிய வகை தக்காளிகள் இடம் பெறவுள்ளன.

1042 total views