மாறின குழந்தைகள்: மனம் மாறாத பெற்றோர்

Report
29Shares

மருத்துவமனை ஊழியர்களின் குளறுபடியால், ஒரே நேரத்தில் இருதம்பதியருக்கு பிறந்த குழந்தைகள் மாற்றி தரப்பட்டன. ஆனால், தாங்கள் வளர்த்து வரும் குழந்தையை விட்டுத் தர, இரு பெற்றோரும் தயாராகாத சம்பவம், அசாமில் நடந்துள்ளது.

ஆண் குழந்தை

அசாமில், முதல்வர் சர்பானந்தா சோனவால் தலைமையில், பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள, மங்கல்டாய் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில், இரு ஆண்டுகளுக்கு முன், ஒரே நேரத்தில், இரு தம்பதியருக்கு ஆண் குழந்தைகள் பிறந்தன.ஆனால், மருத்துவமனை ஊழியர்களின் குளறுபடியால், அந்த குழந்தைகள் மாற்றித்தரப்பட்டன.

முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த, சகாபுதீன் அகமது - சலிமா அகமதுதம்பதிக்கும், ஹிந்துபழங்குடியினத்தைச் சேர்ந்த, அனில் பரோ - செவாலி தம்பதிக்கும், தாங்கள் வளர்த்து வரும் குழந்தை தங்களுடையது தானா என, சந்தேகம்ஏற்பட்டது.

இது தொடர்பாக, சகாபுதீன், மருத்துவமனை மற்றும் சுகாதாரத் துறையுடன் போராடியும், எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.தகவலறியும் உரிமை சட்டத்தில் கிடைத்த தகவலில், தனக்கு குழந்தை பிறந்த நேரத்தில், பரோ - செவாலி தம்பதிக்கும் குழந்தை பிறந்த தகவல், அவருக்கு கிடைத்தது.

இதையடுத்து, அவர் போலீசில் புகார் கொடுத்ததுடன், நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையே, பரோ மற்றும் அகமது தம்பதியர் சந்தித்து பேசினர். குழந்தைகளுக்கு மரபணு சோதனை செய்ய முன்வந்தனர்.

மரபணு சோதனையில், குழந்தைகள், பரஸ்பரம் மாற்றிக் கொடுக்கப்பட்டது தெரிந்தது.தயாரில்லை இந்நிலையில், தாங்கள் வளர்த்து வரும் குழந்தைகளை விட்டுத் தர, இரு தம்பதியரும் தயாராக இல்லை.இது தொடர்பாக நீதிமன்றத்தில் தெரிவிக்க, இரு பெற்றோரும் முடிவு செய்துள்ளனர்.இருப்பினும், மருத்துவமனையின் அலட்சியப் போக்குக்கு எதிரான வழக்கை தொடர முடிவு செய்துள்ளனர்.

1239 total views