ரோகிங்யா இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்களை ஆக்கிரமித்த மியான்மர் ராணுவம்!

Report
18Shares

மியான்மர் நாட்டிலிருந்து வெளியேறிய இஸ்லாமியர்களின் இருப்பிடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள், ராணுவத் தளங்களாக மாறியுள்ளன என மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்து வரும் தனியார் தொண்டு நிறுவனமான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில், பௌத்தர்களுக்கும் ரோகிங்யா இஸ்லாமிய மக்களுக்கும் இடையே, மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, மியான்மர் ராணுவமும் புத்த மதத்தினரும், இஸ்லாமிய மக்களை எதிர்த்துப் பயங்கர தாக்குதல் நடத்தினர். அதனால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றனர்.

சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோகிங்யா இஸ்லாமிய மக்கள், மியான்மர் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவர்கள் வசித்துவந்த இருப்பிடங்கள் மற்றும் வழிப்பாட்டுத் தலங்களை ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. மேலும் மியான்மர் அரசு, அவர்களின் இடங்களை ராணுவத் தளங்களாக மாற்றியுள்ளதாக, அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறியுள்ளது.

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு, ரோகிங்யா இஸ்லாமிய மக்கள் வசித்த இடங்களை ராணுவத் தளங்களாக மியான்மர் அரசு மாற்றி வருவதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளது என்று கூறி அதுதொடர்பான செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளனர். மேலும், அதற்கான சாட்சியங்களும் உள்ளன எனத் தெரிவித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, மியான்மர் மற்றும் வங்கதேசத்துக்கிடையே கடந்த வாரம், ரோகிங்யா இஸ்லாமிய மக்களை இரண்டு ஆண்டுகளுக்குள் மீண்டும் மியான்மருக்கு திருப்பி அனுப்பும் ஒப்பந்தம் கையெழுத்தானது

1585 total views