டிரம்புடன் சிங்கப்பூர் தலைமை அமைச்சர் சந்திப்பு

Report
16Shares

வடகொரிய அதிபருடன் பேச்சு நடத்துவற்காக சிங்கப்பூர் வந்து சேர்ந்துள்ள டிரம்ப், இன்று சிங்கப்பூர் தலைமை அமைச்சரைச் சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் நாளை காலை சிங்கப்பூரின் பிரபலமான சுற்றுலாத்தலமான சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.

உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று சிங்கப்பூரைச் சென்றடைந்தார். சிங்கப்பூர் நாட்டின், பய லேபார் வானூர்தி தளத்திற்கு வந்தடைந்த அவரை, சிங்கப்பூர் அயலுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

இந்த நிலையில், சிங்கப்பூர் அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகையான இஸ்தானாவில் இன்று அமெரிக்க அதிபர் டிரம்புக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைமை அமைச்சர் லீ செய்ன் லூங் டிரம்பை வரவேற்று அழைத்துச் சென்றார். டிரம்புடன் அமெரிக்க அயலுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவு செயலாளர் சாரா மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

இதையடுத்து இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து லீ செய்ன் லூங், டிரம்ப் பேச்சு நடத்தினர். பின்னர் டிரம்ப் மற்றும் அவருடன் சென்ற குழுவினருக்கு தலைமை அமைச்சர் லீ மதிய விருந்து அளித்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

1349 total views