உட்கட்டமைப்பு முதலீடுகளில் அதிகரிக்கும் அமெரிக்க – சீன அதிகாரப் போட்டி

Report

சீனா தனது ஒரு அணை மற்றும் பாதைத் திட்டத்தின் மூலம், ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வரும் நிலையில் இதனை எதிர்க்கும் முகமாக அமெரிக்காவானது வெளிநாட்டு அபிவிருத்தி நிதியுதவியை மேலும் அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.

அமெரிக்காவின் வெளிநாடுகளுக்கான தனியார் முதலீட்டு நிறுவனம் (Overseas Private Investment Corp) மற்றும் ஏனைய அமைப்புக்களுடன் இணைந்து 60 பில்லியன் டொலரை வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கான வாக்கெடுப்பு ஒன்று கடந்த புதன்கிழமை அமெரிக்க சட்டசபையில் இடம்பெற்றது.

இது தொடர்பான சட்டமூலமானது ஏற்கனவே அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கையெழுத்து தேவையாக உள்ளது.

பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் சீனாவிடம் கடனைப் பெற்றுள்ள நிலையில், சீனாவின் செல்வாக்கு விரிவடைந்து வருவது தொடர்பாக அமெரிக்கா அதிருப்தியடைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது அமெரிக்கா தனது வெளிநாட்டு அபிவிருத்தி முதலீட்டை அதிகரிப்பதற்கான முயற்சியை முன்னெடுத்ததன் மூலம் உலகின் இருபெரும் பொருளாதார வல்லரசு நாடுகளுக்கு இடையில் ஏற்கனவே வர்த்தக மற்றும் இராணுவ ரீதியான முரண்பாடுகள் நிலவும் நிலையில் தற்போது கட்டுமான முதலீடுகளிலும் முரண்பாடுகள் தோன்றியுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க நிர்வாகமானது பொதுமக்களின் பணத்தைப் பயன்படுத்தி தனியார்துறை முதலீட்டை ஈர்ப்பதற்கான நகர்வுகளை முன்னெடுக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவின் Overseas Private Investment Corp நிறுவனமானது குறைந்த செலவில் அரசாங்கப் பிணைப்பத்திரங்களை வெளியிட முடியும். இந்நிறுவனத்தின் புதிய நிர்வாகமானது அமெரிக்க அரசாங்கத் திட்டங்களில் சமபங்குகளை எடுக்கக்கூடிய வாய்ப்பும் காணப்படுகிறது.

OPIC போன்ற அரசாங்க நிதி நிறுவனங்களை முதலீட்டுத் திட்டங்களிலிருந்து நீக்குவதற்கான வழிவகைகளை ட்ரம்ப் ஆராயும் நிலையிலும் இவர் சீனா தொடர்பாக கடும்போக்கான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதால் சீனாவின் ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டத்தினை எதிர்ப்பதற்கு அரச நிதி நிறுவனங்களின் உதவியும் தேவை என்பதை அவர் நோக்க வேண்டிய நிலையிலுள்ளார்.

அமெரிக்க சட்டசபையில் கடந்த புதன்கிழமை வாக்கெடுப்பிற்கு விடுக்கப்பட்ட சட்டமூலத்தின் முதன்மை அனுசரணையாளரான அமெரிக்க குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ரெட் யோகோ தனது நேர்காணல் ஒன்றில் சீனாவை கடுமையாகச் சாடியிருந்தார். ‘சீனா அதிகாரத்துவம் மற்றும் பொதுவுடமை போன்றவற்றை ஏற்றுமதி செய்கிறது. சீனா ஜனநாயகத்திற்குப் பதிலாக தங்களது வர்த்தகக் குறியீட்டை வழங்குகிறார்கள்’ என யோகோ தனது நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

சிறிலங்கா மற்றும் எல்சல்வடோர் போன்ற நாடுகளின் உள்விவகாரங்கள் சீனா தனது அதிகாரத்தைப் பிரயோகிப்பதாக யோகோ சுட்டிக்காட்டியுள்ளார். சீனாவின் நிதியீட்டங்களுக்கு மாற்று வழியாகவே அமெரிக்கா வெளிநாடுகளுக்கான முதலீடுகளை விரிவாக்கியுள்ளதாக யோகோ மேலும் தெரிவித்தார்.

நேரடியான அரச முதலீடுகளுக்கு சிறந்ததொரு மாற்றுவழியை அமெரிக்காவின் புதிய சட்டமூலம் வழங்குவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் செயலர் மைக் பொம்பியோ கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார். அமெரிக்காவின் புதிய நிறுவனத்தின் இலக்குகளை மேம்படுத்துவதற்கு அனைத்து கூட்டணிகள் மற்றும் பங்காளி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் மைக் போம்பியோ குறிப்பிட்டார்.

சீனா தனது ஒரு ரில்லியன் டொலர் பெறுமதியான பட்டுப்பாதைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பொது கடன் வழங்குநர்கள் மற்றும் அரசிற்குச் சொந்தமான நிறுவனங்களைப் பயன்படுத்துகின்றது. அளவு மற்றும் நிதி வரைமுறைகள் தொடர்பில் சீனாவுடன் போட்டியிடுவது கடினமான விடயம் எனவும் ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவால் நிர்ணயிக்கப்பட்ட பொருளாதாரச் சட்ட நடைமுறைகளை சீனா பின்பற்ற வேண்டும் என அனைத்துலக சமூகம் சீனா மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவம் தெரிவித்தார்.

சீனா தனது பெருந்தொகையான முதலீட்டைப் பயன்படுத்தி அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வருவதாக ட்ரம்ப் நிர்வாகம் கவலையடைந்துள்ளது. கொங்கோ குடியரசிற்கு சீனாவால் வழங்கப்பட்ட கடன் மூலம் சீனாவானது ஐந்து ஆண்டுகளில் பத்து மடங்கு நிதியைச் சம்பாதித்துள்ளதாக அனைத்துலக நிதி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

சீனா தனது இருப்பை பலப்படுத்துவதற்காக தென்னாபிரிக்காவிற்கு மேலும் நிதியை கடனாக வழங்கும் என அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

கடன் பொறிக்குள் அகப்படும் நாடுகளிடமிருந்து கடன்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக கடன்வழங்குநர் நாடுகளைக் கொண்ட ‘பாரிஸ் கழகம்’ போன்ற நிறுவனங்களின் வரையறைகளைப் பின்பற்ற வேண்டும். ஆனால் சீனா இக்கழகத்தின் நிரந்தர உறுப்பு நாடாகக் காணப்படவில்லை. ஆதலால் சீனா மீது பாரிஸ் கழகத்தின் சட்ட வரையறைகளைப் பிரயோகிப்பதென்பது கடினமான பணியாகும்.

கொங்கோ விடயத்தில், சீனா தனது நட்டத்தைக் குறைப்பதற்காக முதலில் பாரிஸ் கழகத்துடன் சமரசத்தை எட்டியிருக்கலாம் என நோக்கப்படுகிறது. இதேபோன்று பாகிஸ்தான், சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் அனைத்துலக நாணய நிதியத்தின் உதவியை நாடியிருந்தமை அமெரிக்காவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்துலக நாணய நிதியத்தின் மிகப் பெரிய பங்காளி நாடான அமெரிக்காவானது சீனாவிடமிருந்து கடன்களைப் பெற்ற நாடுகளுக்கு தனது நிதியை வழங்குவதை விரும்பவில்லை.

மேற்குலகின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு சீனா செயற்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை சீனா, அமெரிக்கா மீது இடுகின்றது. ஆனால் பூகோள பொருளாதார ஒழுங்கு மீதான இந்த நாடுகளின் முறுகலானது விரைவில் தீர்வை எட்டப்போவதில்லை. இந்நிலையில் கட்டுமான முதலீடு தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான மோதல் நிலையும் தொடரும் நிலை காணப்படுகிறது.

717 total views