இந்தோனேசியாவில் தொடரும் சோகம்: உயிரிழப்புகளை கணிக்க முடியாத நிலை!

Report

இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாக சரியான எண்ணிக்கையை வெளியிட முடியாதுள்ளதாக அந்நாட்டு தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பல கட்டடங்களும், குடியிருப்புகளும், வர்த்தக நிலையங்களும் மண்ணுக்குள் புதையுண்டு போயுள்ளதால் எத்தனை பேரை காணவில்லையென யாருக்கும் தெரியாதென குறித்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

எனினும், நேற்றுவரை (புதன்கிழமை) கண்டெடுக்கப்பட்ட உடல்களின் பிரகாரம், 2,045 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

சுமார் 5000இற்கும் அதிகமானோரை காணவில்லையென சந்தேகிக்கப்படும் நிலையில், அவர்களது நிலை தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

காணாமல் போனோரை தேடும் நடவடிக்கைகள் நாளையுடன் முடிவுக்கு வரவுள்ளன். எனினும், அவசர மீட்பு நடவடிக்கைகள் இம்மாத இறுதிவரை தொடருமென அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் இந்தோனேசியாவின் சுலவெசி தீவை 7.5 ரிச்டர் அளவில் தாக்கிய இந்த நிலநடுக்கத்தில் சுமார் 75,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். தீவின் முக்கிய நகரமான பலுவிலிருந்து மாத்திரம், 82,000 பேர் இடம்பெயர்ந்து தற்காலிக கொட்டகைகளில் வசித்து வருகின்றனர்.

காயமடைந்த சுமார் 2500இற்கும் அதிகமானோருக்கு ஆங்காங்கே அமைக்கப்பட்ட சிகிச்சை நிலையங்களில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. தொற்றுநோய்கள் தொடர்பாக மக்களை அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தின் தாக்கம் இன்னும் ஓயாத நிலையில், நேற்று மற்றுமொரு நிலநடுக்கம் தாக்கியமை குறிப்பிடத்தக்கது.

990 total views