அபுதாபியில் நீதிமன்ற 3-வது அலுவல் மொழியானது இந்தி!

Report

ஐக்கிய அரபு அமீரகங்களின் (யு.ஏ.இ.) தலைநகரமான அபுதாபியில் மூன்றாவது நீதிமன்ற அலுவல் மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது, இந்தி மொழி பேசக்கூடிய தொழிலாளர்கள் தங்களது குறைகளை எளிதில் தெரிவித்து தீர்வு காண உதவியாக இருக்கும்.

இதுவரை அங்கு அரபிக்கும், ஆங்கிலமும் மட்டுமே நீதிமன்ற அலுவல் மொழிகளாக இருந்து வந்தன.

ஐக்கிய அரபு அமீரகங்களில் சுமார் 50 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் வெளிநாட்டினர் ஆவர்.

அவர்களில். சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள். எனவே, இங்குள்ள நீதிமன்றங்களில் இந்தியையும் அலுவல் மொழியாக இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது.

இந்நிலையில், இந்தக் கோரிக்கையை ஏற்று, இந்தியை மூன்றாவது நீதிமன்ற அலுவல் மொழியாக அபுதாபி அரசு நேற்று அறிவித்துள்ளது.

இதன் மூலமாக, இனி அபுதாபியில் உள்ள நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகள், வாத, பிரதிவாதங்கள் உள்ளிட்டவற்றின் பிரதிகள் இந்தி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும்.

அதுமட்டுமின்றி, அபுதாபியில் உள்ள நீதிமன்றங்களில் இனி இந்தி மொழியில் மனு தாக்கல் செய்யவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஐக்கிய அரபு அமீரக துணைப் பிரதமர் ஷேக் மன்சூர் பின்சயீதின் உத்தரவின் பேரில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அபுதாபி நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1289 total views