டன்யூப் ஆறு படகு கவிந்த விபத்து - மேலும் நான்கு சடலங்கள் கண்டெடுப்பு!

Report

ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட் டன்யூப் ஆற்றில் விபத்துக்குள்ளான படகு நீர்பரப்புக்கு மேல் கொண்டு வரப்பட்டபோது படகின் உள்ளே இருந்து மேலும் நான்கு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அந்த நான்கு சடலங்களில் ஒன்று ஹங்கேரியைச் சேர்ந்த படகின் கப்டனுடையது என்றும் மற்றைய மூன்று சடலங்களும் தென்கொரிய சுற்றுலாப் பயணிகளினுடையதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

கடந்த மாதம் 29 ஆம் தேதி இரவு 9 மணியளவில் தென் கொரியாவைச் சேர்ந்த பயணிகள் டன்யூப் ஆற்றில் படகில் சுற்றுலாப்பயணம் மேற்கொண்ட பொழுது அவர்கள் பயணம் செய்த படகு மற்றொரு படகுடன் மோதியதில் விபத்துக்குள்ளாகி நீரில் மூழ்கியது.

படகு விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 35 பேரில் ஏழு பேர் மீட்கப்பட்டனர். உயிரிழந்த பலரின் உடல்களும் மீட்கப்பட்டிருந்தன. எனினும் பலர் காணாமல் போயிருந்தனர்.

ஆறு பெருக்கெடுத்து நீர் நிறைந்திருந்த காரணத்தால் தேடுதல் நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்தன. இந்த படகு விபத்தில் இது வரையில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அவர்களில், 19 பேர் தென்கொரிய சுற்றுலாப் பயணிகள் என்றும் ஒருவர் ஹங்கேரிய படகிலுள்ள மாலுமிக் குழுவைச் சேர்ந்தர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். டன்யூப் ஆறு ஐரோப்பாவின் இரண்டாவது நீளமான ஆறு என்பது குறிப்பிடத்தக்கது.

865 total views