பொலிவியாவில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் - 5 பேர் பலி!

Report

பொலிவியாவில் போராட்டக்காரர்கள் மீது பாதுக்காப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொலிவியாவின் இடைக்கால ஜனாதிபதியாக ஜீனைன் ஏனெஸ் அறிவித்துக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் ஜனாதிபதி ஈவோ மொராலிஸ் ஆதரவாளர்கள் சகாபா நகரில் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போதே, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் துப்பாக்கிச் சூடு குறித்து தகவலறிந்ததும், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் உள்நாட்டுப் போரைத் தொடங்க வேண்டும் எனவும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

பொலிவியாவை கடந்த 14 ஆண்டுகளாக ஆண்டு வந்த ஈவோ மொராலிஸ், கடந்த மாதம் 20ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றாக அறிவித்துக் கொண்டார்.

எனினும், அந்தத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுப்பி, அவரது எதிர்ப்பாளர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, இராணுவம் கேட்டுக்கொண்டதன் பேரில் தனது ஜனாதிபதி பதவியை ஈவோ மொராலிஸ் ராஜிநாமா செய்த நிலையில் அவருக்கு மெக்ஸிகோ அடைக்கலம் அளித்துள்ளது.

இந்த நிலையில், மறு தேர்தல் நடத்தும் வரை நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்பதாக, செனட் சபை துணைத் தலைவர் ஜீனைன் ஏயெஸ் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்துக் கொண்டார்.

எனினும், நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்ற ஜீனைன் முயல்வதாக ஈவோ மொராலிஸின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியதோடு , அவர் இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1180 total views