சிரிய மக்கள் மீது துருக்கி கொண்டுள்ள அக்கறை: அதிபர் எர்டோகன் தகவல்!

Report

சிரிய மக்கள் மீது துருக்கி அக்கறை கொண்டுள்ளது என்றும் அதன் எண்ணெய் வளங்கள் மீது அல்ல என்றும் அந்நாட்டு அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

துருக்கியில் உள்ள சிரிய அகதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் எர்டோகன் அரசு செயல்படுகிறது என துருக்கி எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தின. இந்நிலையில் இதற்கு எர்டோகன் பதிலளித்துள்ளார்.

இஸ்தான்புல்லில் நிகழ்ச்சி ஒன்றில் சிரியாவில் துருக்கி புரியும் மனிதாபிமான உதவிகள் குறித்து எர்டோகன் பேசினார்.

அப்போது அவர் குறிப்பிடுகையில், துருக்கியில் உள்ள சிரிய அகதிகள் அவர்கள் நாட்டுக்குத் திரும்புமாறு துருக்கி எப்போதும் கட்டாயப்படுத்தவில்லை. பல நாடுகள் சிரியாவுடன் எண்ணெய் இருப்புகளைப் பகிர்ந்து கொண்டுள்ளன.

ஆனால் துருக்கி அதனை மறுத்துவிட்டது. எங்களுக்கு சிரியாவில் உள்ள வளங்கள் மீது ஆர்வம் இல்லை. நாங்கள் சிரிய மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளோம் என்றார்.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி இடமான இட்லிப் பகுதியை மீட்க இறுதிச் சண்டை நடந்து வருகிறது. சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் துருக்கி போன்ற நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

330 total views